டெல்லி: 2024ல் அதிக முறை இணைய சேவை முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Access Now அமைப்பு நடத்திய ஆய்வில் அதிக இணைய முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது குறித்து பின்வருமாறு;
இதில் 2024ல் அதிக இணைய முடக்கங்களை சந்தித்த நாடு மியான்மர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் 85 முறை இணைய முடக்கம் அங்கு நடந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஒருமுறை மட்டுமே குறைவாக, ஆண்டு முழுவதும் 84 முறை இந்தியாவில் இணைய முடக்கம் நடந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. பாகிஸ்தானில் ஆண்டு முழுவதும் 21 முறை இணைய முடக்கம் நடந்துள்ளது. பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக ரஷ்யா உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக கருதப்படும் இந்தியாவில், 84 முறை இணைய முடக்கம் நடந்துள்ளது இதுவே முதல்முறை. இந்தியாவில் 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அதிகமுறை இணைய முடக்கத்தை சந்தித்துள்ளன. இதில் மணிப்பூர் முதல் இடத்தில் உள்ளது. அங்கு 21 முறை இணைய முடக்கம் நடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜம்மு – காஷ்மீர் 12 முறை, ஹரியாணா 12 முறை இணைய முடக்கம் நடந்துள்ளன. இந்தியாவில் 84 முறை இணைய சேவை முடக்கப்பட்டதில், 41 முறை போராட்டத்தாலும், 23 முறை வகுப்புவாத வன்முறையாலும் நடந்துள்ளது.
The post இதுவே முதல்முறை.. அதிக இணைய சேவை முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம்!! appeared first on Dinakaran.