போபால்: இந்தியாவில் கடந்த 30 ஆண்டாக திருநங்கை வேடத்தில் காலம் தள்ளிய வங்கதேச வாலிபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரிடம் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் என்ற நபர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தனது 10வது வயதில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவினார். மும்பையில் சுமார் 20 ஆண்டுகள் வசித்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தங்கியிருந்தார்.
அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் இருக்க, கடந்த 8 ஆண்டுகளாக நேஹா கின்னார் என்ற பெயரில் தன்னை திருநங்கையாக அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். போபாலின் புத்வாரா பகுதியில் வசித்த இவரை, உள்ளூர் மக்கள் ‘நேஹா கின்னார்’ என்று மட்டுமே அறிந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட இந்திய ஆவணங்களை போலியாகத் தயாரித்துள்ளார். மேலும், இந்த போலியான இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அவர் பலமுறை வங்கதேசம் சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக போபால் காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையின்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்துல் கலாம் என்கிற நேஹா கின்னார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலியான ஆவணங்கள் மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன.
இவரது கைதானது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மிகத் தீவிரமான விஷயம் என்பதால், ஒன்றிய அரசின் உளவுத்துறை மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படை நேஹா கின்னாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இவர் தங்குவதற்கு இவருக்கு உதவியவர்கள் யார், இதன் பின்னணியில் பெரிய கும்பல் உள்ளதா? என அறிய அவரது செல்போனை சைபர் கிரைம் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். உண்மையிலேயே அவர் திருநங்கையா அல்லது தனது அடையாளத்தை மறைக்க நடித்தாரா என்பதை உறுதி செய்ய அவருக்கு பாலின பரிசோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. தற்போதைக்கு போபால் காவல் நிலையத்தில் உயர் பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
The post இந்தியாவில் கடந்த 30 ஆண்டாக திருநங்கை வேடத்தில் காலம் தள்ளிய வங்கதேச நபர் கைது: உளவுத்துறை போலீசார் விசாரணை appeared first on Dinakaran.