லண்டன்: இந்திய கிரிக்கெட் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி ஹெடிங்லியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக எட்ஜ்பஸ்டன் மைதான நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இல்லாமல் இங்கிலாந்தில் நடைபெறும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்வது இதுவே முதன்முறையாகும். அதுவும் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 200 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் டிக்கெட்கள் காலியாகி உள்ளது.