- பசி, பஞ்சம், பட்டினியால் மேலும் பரிதவிக்கும்
- உள்நாட்டு கலவரம் பல இடங்களில் வெடிக்கும்
- பலுசிஸ்தான் போராட்டம் பெரிதாக பரவும்
- ஆப்கனிடம் கூட அடிவாங்கும் நிலை வரலாம்
பஹல்காம் பகுதியில் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்தியாவின் பதிலடி எப்படி இருக்கும் என்று இப்போது வரை யாராலும் கணிக்க முடியவில்லை. அது சர்ஜிக்கல் ஸ்டிரைக் முறையில் இருக்குமா? இல்லை, பாக். மீது நேரடி தாக்குதலாக இருக்குமா? அல்லது சர்ச்சைக்குரிய பகுதியும், தீவிரவாதிகள் புகலிடமும், அவர்கள் பயிற்சி பெறும் இடமுமான ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைப்பற்றுமா இந்தியா என்ற எண்ணற்ற கேள்விகள் உலா வந்து கொண்டு இருக்கின்றன.
உலகில் நடக்கும் எல்லாவற்றையும் முன்கூட்டியே கணிக்கும் அமெரிக்கா கூட பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எந்தவகையில் எதிர்வினையாற்றப்போகிறது என்பது தெரியாமல் விழிக்கிறது. அதனால் தான் பொத்தாம் பொதுவாக பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களை ஒழிக்க இந்தியா எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைக்கும் அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்டு தெரிவித்து விட்டார். உலக நாடுகள் அனைத்தும் இப்போது இந்தியா எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்க்கப்போவதில்லை. ரூட் கிளியர்.. பந்து இந்தியா வசம் இருக்கிறது. எந்த வகையில் இந்தியா ஆடப்போகிறது என்பதுதான் இன்றைய கேள்வி. மறுபுறம் இந்தியா நேரடி போர் தொடங்கி விட்டால் இனி பாகிஸ்தான் என்னவாகும் என்ற கேள்வியும் உலக அரங்கில் எழுந்து இருக்கிறது.
இந்த கேள்விக்கு காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தில் அந்த அளவுக்கு பசி, பஞ்சம், பட்டினியால் தவிக்கிறது பாகிஸ்தான். உலக நாடுகளிடம் பிச்சை எடுக்காத குறையாக கடன் வாங்கி காலத்தை தள்ளிக்கொண்டு இருக்கிறது. உரிய காலத்தில் கடன் தொகையையும், வட்டியையும் பாகிஸ்தானால் செலுத்த முடியவில்லை. அதனால் ஆயிரமாயிரம் நிபந்தனைகள். அதற்கும் கட்டுப்பட்டுக்கொண்டு சீனாவின் நிர்பந்தங்கள், உலக வங்கியின் அழுத்தங்கள், சவுதியிடம் கெஞ்சிக்கொண்டு பாகிஸ்தான் உலக அரங்கில் தலைநிமிர்ந்து நடப்பதாக நடித்துக்கொண்டு இருக்கிறது.
இப்படியான ஒரு பஞ்ச சூழலில் இந்தியாவுடன் நேரடி யுத்தம் மூண்டால் என்னவாகும் பாகிஸ்தான்…?
இந்தியாவுடன் எந்த ஒரு ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்தாலும் பொருளாதார ரீதியில் பாகிஸ்தான் பேரழிவை சந்திக்கும். இதுதான் இன்றைய பாகிஸ்தான் நிலை. பாகிஸ்தான் ஏற்கனவே பல்வேறு பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. உலக நாடுகளிடம் இருந்து இதுவரை ரூ.20 லட்சம் கோடி கடனாக வாங்கி வைத்திருக்கிறது. அந்த நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு வெறும் ரூ.7 ஆயிரம் கோடிதான் இருக்கிறது. இந்த நிதியை வைத்து அடுத்த ஒன்றரை மாதங்களுக்கான இறக்குமதிக்கு மட்டுமே பாகிஸ்தானால் செலவிட முடியும். இப்படி பல்வேறு நெருக்கடியில் சிக்கி இருக்கும் பாகிஸ்தான் போரில் இறங்கும் போது அதற்கும் பல ஆயிரம் கோடியை செலவிட வேண்டி இருக்கும். இப்போதைய சூழலில் பாகிஸ்தானால் இது முடியாது. இது மேலும் பாகிஸ்தானை வறுமையின் கோரத்திற்கு கொண்டு சென்றுவிடும். இப்போதே பாகிஸ்தானின் பல மாகாணங்கள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன. போதுமான உணவு உற்பத்தி அங்கு இல்லை. இந்திய எல்லை வழியாக செல்லும் கோதுமைக்காக ஏங்கி காத்து இருக்கிறது.
இது அந்த நாட்டை மேலும் நிதி சிக்கலில் கொண்டு சென்று விடும். பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ஏற்கனவே சரிவடைந்து வருகிறது. அதாவது தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 281 ரூபாய், அது 500ஆக உயரும் என சொல்லப்படுகிறது. இவ்வாறு அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிவடையும் போது அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். இறக்குமதிக்கு அதிக பணம் செலவிட வேண்டும், ஏற்கனவே டாலர் கையிருப்பு குறைந்துவிட்டது. இந்நிலையில் எரிபொருட்கள் , மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து சாமானிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியமான ஐஎம்எப் ரூ. 3 லட்சம் கோடி நிதி உதவி வழங்கி இருக்கிறது. இதற்கு பிராந்திய ரீதியாக போர் உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என ஏற்கனவே ஐஎம்எப் நிபந்தனை விதித்துள்ளது. இதை மீறி பாகிஸ்தான் அரசு போருக்காக அதிக பணத்தை செலவிடும்போது அனைத்து நிதி உதவியும் நிறுத்தப்படும். இது பாகிஸ்தான் நிலையை இன்னும் அதிகமாக மோசம் அடைய செய்யும். கடனை திரும்ப செலுத்துவதற்கு பணம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி வரும் நிதி உதவியும் நிறுத்தப்படும். சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் நிறுத்தப்படும். இந்த திட்டத்திற்காக சீனா ரூ. 6 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. இவை எல்லாம் பாகிஸ்தானுக்கு பேரிழப்பு.
ஏற்கனவே பஹல்காம் தாக்குதலால் இந்தியாவுடனான ரூ.17 ஆயிரம் கோடி வர்த்தகத்தை பாகிஸ்தான் இழந்து நிற்கிறது. சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும். அதோடு விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். இதுதான் பாகிஸ்தானுக்கான மிகப் பெரிய தண்டனை. இது தவிர, சாலை எல்லைகளை இந்திய அரசு மூடியுள்ளது. இது பாகிஸ்தான் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரித்துள்ளது. தூதரக ரீதியாகவும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்து ரீதியாக பாகிஸ்தான் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்து உள்ளது. அதேபோல இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு கடல் வழியே நிகழும் வணிகத்தை 95 சதவீதம் தடுத்து நிறுத்திவிடும் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தானில் எரிபொருள், அரிசி, துணிமணி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதி குறைந்து அதன் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயரும். ஏற்கனவே பல்வேறு உள்நாட்டு குழப்பங்களால் தடுமாறும் பாகிஸ்தானுக்கு இது மேலும் பேரிடியாக வந்து அமையும். அதனால் பாகிஸ்தான் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய பிரச்னைகளை எல்லாம் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு புறம் ஆப்கன் எல்லை பிரச்னை அதிகரித்துள்ள சூழலில் பலுசிஸ்தான் பகுதியை தனிநாடாக அறிவிக்க கேட்டு போராட்டம் நடந்து வருகிறது. பயணிகள் ரயில் கூட கடத்தப்பட்டது. தற்போது பாகிஸ்தான் உள்ள சூழலில் பலுசிஸ்தான் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும். ஆப்கன் அகதிகளை ஏப்.30ம் தேதிக்குள் வெளியேற்ற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை 80 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் 20 லட்சம் பேர் வெளியேற்றப்படலாம் என்று கருதப்படுகிறது. பலுசிஸ்தான் பகுதி மக்களும், பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கன் அகதிகளும் இணைந்து போராடினால் பாகிஸ்தான் அரசுக்கு அது மிகப்பெரிய சவாலாக மாறும். ஆப்கன் கூட தனது இன்னொரு முகத்தை பாகிஸ்தான் மீது காட்டக்கூடிய சூழல் உருவாகி விடும். பாகிஸ்தான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியினர் மேலும் போராட்டம் நடத்துவார்கள். இதனால் உள்நாட்டு கலவரம் வெடித்து பாகிஸ்தான் சுடுகாடாக மாறிவிடும். இவை எல்லாம் நடக்கும் என்பது பாகிஸ்தான் அரசுக்கும் தெரியும். இப்போது அனைவரது பார்வையும் இந்தியா என்ன பதில்வினை தரப்போகிறது என்பது பற்றியதுதான். அதில் தான் இனி பாகிஸ்தானின் தலைவிதி நிர்ணயிக்கப்பட உள்ளது.
- பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கடன் ரூ.20,00,000 கோடி
- சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) கடன் ரூ.3,00,000 கோடி
- சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டம் ரூ.6,00,000 கோடி
1 டாலர் = 281 பாகிஸ்தான் ரூபாய்
அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு இன்று 281 ரூபாய். போர் ஏற்பட்டால் அது 500 வரை உயரும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிவடையும் போது அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். மற்ற நாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய அதிக பணம் செலவிட வேண்டும். இதற்கெல்லாம்
இன்றைய பாகிஸ்தான் தயாராக இல்லை.
இந்தியாவின் 5 அட்டாக்
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா எடுத்த 5 அதிரடி முடிவுகள்:
- இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது.
- ஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது.
- சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் இன்று இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
- டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த ஆலோசகர்கள் ஒரு வாரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
- இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்படுகிறது.
The post இந்தியா தாக்குதலை தொடங்கிவிட்டால் என்னவாகும்பாகிஸ்தான்..? appeared first on Dinakaran.