அமிர்தசரஸ்: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 ட்ரோனை கைப்பற்றிய பஞ்சாப் எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மாவட்டங்களில் நேற்று எல்லைப் பாதுகாப்பு படை நடத்திய இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில், பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி பறந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த ட்ரோனில் போதைப்பொருளான ஹெராயின் ஒரு பாக்ஸ் இருந்தது.
ராஜதல் கிராமத்திற்கு அருகிலுள்ள வயலில் 559 கிராம் எடையுள்ள ஹெராயின் பாக்ஸ் கைப்பற்றப்பட்டது. இரண்டாவதாக, குர்தாஸ்பூர் மாவட்டத்தின் கோலா தோலா கிராமத்திற்கு அருகிலுள்ள அறுவடை செய்யப்பட்ட வயலில், அதேபோல் ட்ரோன் ஒன்றை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர். எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில், அந்த ட்ரோன் கண்டெடுக்கப்பட்டது. அதிலும் போதைப் பொருள் இருந்தது. இந்த சம்பவங்கள், பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பல்களின் கைவரிசை என்பதால், இந்த குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் எல்லையில் வசிப்போரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 6ம் தேதி ஆவன்பாசு கிராமத்தில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று கடத்தல்காரர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள், 25 கிராம் ஹெராயின், 2,000 ரூபாய் போதைப்பொருள் பணம், நான்கு ஸ்மார்ட்போன், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு டிராக்டர் ஆகியவை கைப்பற்றினர். எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன்களைப் பயன்படுத்தி போதை பொருள் கடத்தி வரும் கும்பல்கள், மூடுபனி காலத்தில் கடத்தல் ெதாழிலை செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
The post இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப்பில் 2 ட்ரோனில் போதை பொருள் கடத்தல் appeared first on Dinakaran.