திருமலை: இந்தியா – பாகிஸ்தான் போர் எதிரொலியாக திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக திருமலை முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு மேற்கொள்ள திருப்பதி எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜு உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆக்டோபஸ் கமாண்டோ, சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்டோர் நேற்று முதல் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
திருமலை ஜிஎம்சி டோல்கேட்டில் சோதனைகளை மேற்கொண்டும், திருமலையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கொண்டும் விஜிலென்ஸ் படையினர் சோதனை நடத்தினர். சந்தேகத்திற்குரிய ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வுகளை செய்தனர். மேலும் திருமலை ஏழுமலையான் கோயில் மாடவீதி, புஷ்கரணி, அன்னதான சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் திருப்பதி மலைப்பாதை, அலிபிரி சோதனை சாவடியில் வழக்கத்தைவிட தீவிர சோதனை நடத்தியபின்னரே பக்தர்களை திருமலைக்கு அனுமதிக்கின்றனர்.
பார்வையற்றோர் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நேற்று மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 100 பேர் வந்தனர். அவர்கள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி தலைமையில் சிறப்பு தரிசனம் செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஏழுமலையானை கண்களால் பார்க்க முடியாவிட்டாலும் கோயில் சுற்றுப்புறத்திலும், கோயிலுக்குள்ளும் சென்ற அனுபவம், புதிய சக்தியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என்றனர்.
10 மணிநேரம் காத்திருப்பு;
ஏழுமலையான் கோயிலில் நேற்று 68,213 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 29,635 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.45 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 14 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 10 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணிநேரத்தில் தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோயில் மீது பறந்த 11 விமானங்கள்;
திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது நேற்று அடுத்தடுத்து 11 விமானங்கள் பறந்தன. மூலவர் கருவறை உள்ள ஆனந்த நிலையம் மீது விமானங்கள் செல்வது ஆகம சாஸ்திர விதிகளுக்கு எதிரானது. மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே திருமலை வான்வழியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கவேண்டும் என ஒன்றிய அரசை தேவஸ்தானம் பலமுறை வலியுறுத்தி வருகிறது. திருமலைக்கு ஏற்கனவே பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில், தற்போது எல்லையில் இந்தியா – பாகிஸ்தான் போர் நடந்து வருவதால் திருமலை வான்பரப்பில் விமானம் பறக்கத் தடைசெய்யப்பட்ட பகுதியாக உடனடியாக அறிவிக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post இந்தியா-பாக் போர் எதிரொலி; திருமலை முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு: பக்தர்களின் உடமைகள் சோதனை appeared first on Dinakaran.