புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் நிறுத்தம் என இரு நாடுகளும் முடிவு செய்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முப்படைகளின் தளபதிகள், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சனிக்கிழமை (மே 10) போர் நிறுத்தம் என அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் என்பது கவனிக்கத்தக்கது. இந்தக் கூட்டம் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது. வரும் 12-ம் தேதி (திங்கள்கிழமை) போர் நிறுத்த ஒப்பந்தம் இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள நாட்டில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல். அதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.