அரசியல், கட்டுரை, தமிழ்நாடு

கருணாநிதி ஓர் சகாப்தத்தின் பயணம்

இன்றைய நாகை மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் 1924 ஜூன் 3 அன்று முத்துவேலர் – அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் தட்சிணாமூர்த்தி என்கிற கருணாநிதி. சாதிரீதியாக பெரும் தாக்குதலை எதிர்கொண்ட ஒரு சமூகத்தில் பிறந்த கருணாநிதி, நாட்டிலேயே அதிகபட்சமாக 60 ஆண்டுகள் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் என்பதும் தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்தின் அதிக நாள் முதல்வராக இருந்தார் என்பதும் சாதி ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஜனநாயகத்தில் பெரும் ஆச்சரியங்களில் ஒன்று. இளவயதில் திருவாரூரில் பள்ளிக்கூடத்தில் சேரச் சென்றபோது தலைமையாசிரியர் கஸ்தூரி ஐயங்கார், “இடமில்லை” என்று சொல்லிவிட, “பள்ளியில் சேர்த்துக்கொள்ளாவிட்டால் கமலாலயம் தெப்பக்குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வேன்” என்று சொல்லி பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தவர் கருணாநிதி. இந்தப் போராட்டக் குணம்தான் அவரை காலம் முழுமைக்கும் உயரங்களுக்கு இட்டுச் செல்லும் வாகனமாக இருந்தது.

கருணாநிதியின் அரசியல் வாழ்வில் பெரும் துணையாக இருந்தது அவருடைய குடும்பம். அவர் பத்திரிகை நடத்தினால், குடும்பத்தினர் அதை விற்பனைக்குக் கொண்டுசேர்ப்பவர்களாக இருந்தார்கள். அவருடைய அக்காள் மகன்கள் மாறன், செல்வம் இருவரும் தங்கள் வாழ்க்கை இலக்கையெல்லாம் மறந்து கருணாநிதிக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தது ஓர் உதாரணம். 1944-ல் திருமணம் முடித்தார் கருணாநிதி. முத்து என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவி பத்மா 1948-ல் மறைந்தார். பிறகு, தயாளுவைக் கரம் பிடித்தார் கருணாநிதி. அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு ஆகியோர் தயாளுவுக்குப் பிறந்தவர்கள். அடுத்து, ராஜாத்தியை மணந்தார். கனிமொழி இவருக்குப் பிறந்தவர். குடும்ப-வாரிசு அரசியல் விமர்சனங்களுக்கு இடையில்தான் கருணாநிதியின் அரசியல் பயணமும் இடைவிடாமல் தொடர்ந்தது.

பள்ளிக்கூடத்தில் படித்தபோதே சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார் கருணாநிதி. அவருடைய 14-வது வயதில் அழகிரிசாமியின் பேச்சு அவருக்குள் ஏற்படுத்திய தாக்கம் இதில் முக்கியமானது. அதேபோல, பள்ளிக் காலத்தில் அவர் வாசித்த ‘பனகல் அரசர்’ சிறுநூலும் அவரிடம் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. சமூகநீதிக்கான அரசியலே தனக்கான பாதை என்று வகுத்துக்கொண்டார் கருணாநிதி. இந்தப் பாதை பெரியாரிடம் அவரைக் கொண்டுசேர்ந்தது. ஈரோட்டில் ‘குடிஅரசு’ பத்திரிகையின் துணையாசிரியராகப் பணியாற்றிய ஓராண்டு காலத்தில் தன்னைப் புடம் போட்டுக்கொண்டார். பெரியாரியத்துக்கு வெகுஜன அரசியல் வடிவம் கொடுத்தவர் அண்ணா என்றால், அதற்குப் பெருமளவில் செயல் வடிவம் கொடுத்தவர் கருணாநிதி.

எவர் ஒருவரையும்விட கருணாநிதிக்குப் பிடித்தமானவராக இருந்தார் அண்ணா. முதல் முறை அண்ணாவைப் பார்த்தபோதே அவருடைய எளிமையைக் கண்டு பெரும் தாக்கத்தைப் பெற்றார். ‘பெரியாரா, அண்ணாவா’ என்ற கேள்வி எழுந்தபோதும் கருணாநிதி தேர்ந்தெடுத்தது அண்ணாவைத்தான்; உடல் நலம் குன்றி வீட்டிலேயே முடங்கிவிட்ட இறுதிக் காலத்தில் அவருக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் அவர் முதலில் உச்சரித்ததும் அண்ணாவைத்தான். அண்ணாவோடு திமுக முடிந்துவிடும் என்ற கணக்கை உடைத்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கட்சியைத் தன் தலைமையில் வழிநடத்தினார் கருணாநிதி. 1959 சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100 இடங்களில் 45 இடங்களைப் பிடித்தது திமுக. அண்ணா போட்டியிட நினைத்த இடங்களைக் காட்டிலும் கூடுதலான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி, வென்றும் காட்டினார் கருணாநிதி. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்குப் பரிசளித்தார் அண்ணா. அதைத் தனது வாழ்நாள் முழுவதும் அணிந்திருந்தார் கருணாநிதி. 1967-ல் முதன்முதலில் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தபோது பொதுப்பணித் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரானார் கருணாநிதி. தேர்தல் வியூக அமைப்பிலும் பங்காற்றினார். அப்போதே அவருடைய பணி கவனிக்கும்படியாக இருந்தது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்றவர் அண்ணாவின் கொள்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதையே தனது அரசியலாக மாற்றிக்கொண்டார் என்று சொல்லலாம். சென்னையின் முக்கியமான மேம்பாலம், சாலை தொடங்கி ஆசியாவிலேயே பெரிய நூலகம் வரை தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட முக்கியமான அமைப்புகள், திட்டங்களுக்கு அண்ணாவின் பெயரையே சூட்டினார் கருணாநிதி.

இந்திய வரலாற்றின் மிக சுவாரஸ்யமான அத்தியாயங்களில் ஒன்று, எம்ஜிஆர் – கருணாநிதி உறவு. சினிமா காலத்திலேயே தொடங்கிவிட்ட நட்பு அது. எம்ஜிஆருக்குப் ‘புரட்சி நடிகர்’ பட்டத்தைக் கொடுத்தவர் கருணாநிதி. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி முதல்வராவதற்குத் துணை நின்றவர் எம்ஜிஆர். இருவரின் உறவில் ஏற்பட்ட விரிசல் அதிமுக எனும் புதிய அத்தியாயத்துக்கு வழிவகுத்தது. 1977-ல் முதல்வரான எம்ஜிஆர் உயிரோடு இருக்கும் வரைக்கும் கருணாநிதியால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதேபோல, கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராவதையோ, திமுக வலுவான எதிர்க்கட்சியாக திகழ்வதையோ எம்ஜிஆராலும் தடுக்க முடியவில்லை. பிற்பாடு பேசிக்கொள்வதே அரிதாகிவிட்ட சூழல் உருவானது என்றாலும், இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் நேசித்தனர், மதித்தனர். ஒருமுறை எம்ஜிஆர் மகிழ்வார் என்று கருதி அதிமுக தலைவர் ஒருவர் அவரிடம் பேசும்போது, ‘கருணாநிதி’ என்று பெயர் சொல்லி அவரைக் கீழே வைத்துப் பேச, ‘என் முன்பே எப்படி கலைஞரை ‘கருணாநிதி’ என்று அழைக்கலாயிற்று?’ என்று அவரைக் கடிந்து வெளியேற்றினார் எம்ஜிஆர். உடல்நலம் குன்றி எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்தபோது ‘நானும் பிரார்த்திக்கிறேன்’ என்று ‘முரசொலி’யில் எழுதினார் கருணாநிதி. எம்ஜிஆர் மறைந்த அன்றிரவு முழுவதும் அழுதுகொண்டிருந்தார் கருணாநிதி.

சமூக நலத் திட்டங்களின் முன்னோடி

இந்தியாவுக்கே வழிகாட்டுகிற பல நல்ல சமூக நலத் திட்டங்களை உருவாக்கியவர் கருணாநிதி. சத்துணவுடன் முட்டை, பள்ளி செல்ல கட்டணமற்ற பஸ் பாஸ், விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம், விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 34 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள், குடிசையிலும் நடைபாதைகளிலும் வாழ்ந்த மக்களுக்காக குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், கண்ணொளி திட்டம், பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகள் மறுவாழ்வு என்று பல சமூக நலத்திட்டங்களைக் கொண்டுவந்தவர் அவர்.

தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தை அவர் அறிவித்தபோது கடும் விமர்சனங்கள் எழுந்தன. “ஏழைகள் தொலைக்காட்சி பார்க்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?” என்று எதிர்க்கேள்வி கேட்டவர் வெற்றிகரமாக அத்திட்டத்தையும் நிறைவேற்றினார். ‘ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி’ எனும் வாக்குறுதியோடு 1967-ல் தேர்தலைச் சந்தித்த திமுக, கருணாநிதியின் 2006 ஆட்சிக்காலத்தில் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற மகத்தான திட்டத்தைச் செயல்படுத்தியது.

பிற்பாடு அது விலையே இல்லாமல் குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி வழங்கும் திட்டமாக அதிமுக ஆட்சியில் வளர்ந்தது. இந்தியாவிலேயே முதலாவதாக கை ரிக்ஷாக்களை ஒழித்ததுடன், அவர்களுக்கு சைக்கிள் ரிக்ஷாவும் வழங்கினார். பெண்கள் உயர்வுக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் வகையில் படிப்பு முதல் மகப்பேறு வரையில் பல்வேறு உதவித் திட்டங்களைக் கொண்டுவந்தார். பெண்களுக்குச் சொத்தில் சமவுரிமை கொண்டுவந்தது அவருடைய முக்கியமான சாதனைகளில் ஒன்று!

திமுகவின் ‘திராவிட நாடு’ லட்சியம் நேரு கொண்டுவந்த பிரிவினைவாதத் தடைச் சட்டத்தால் தகர்க்கப்பட்டது. தனி நாடு கோரும் திமுக உள்ளிட்ட இயக்கங்களை முடக்கும் இலக்கோடு கொண்டுவரப்பட்ட அந்தச் சட்டத்தின் தொடர்ச்சியாக திமுகவின் இலக்கை ‘மாநில சுயாட்சி’ என்றாக்கினார் அண்ணா. கருணாநிதி ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்பதை 1970-களின் பெரும் முழக்கம் ஆக்கினார். “மக்களவை மக்கள்தொகை அடிப்படையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், மாநிலங்களவை தேசிய இனங்களின் அவையாக, எல்லா மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட அவையாக இருக்க வேண்டும்” என்று 1970 தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் பேசினார். அரசமைப்புச் சட்டத்தில் மத்திய – மாநில அரசுகளின் உறவு ஆராயப்பட வேண்டும் என்றவர் அதை ஆராய ‘நீதிபதி ராஜமன்னார் தலைமையிலான குழு’வை அமைத்தார். மாநிலங்களின் உரிமை தொடர்பாகப் பேசுவோர் இன்றும் ஒரு பெரும் சாசனமாகக் கருதும் ஆவணம் ராஜமன்னார் குழு அளித்த பரிந்துரைகள். மாநிலத்துக்கு என்று தனிக் கொடி கேட்டு, தமிழ்நாட்டுக்கு என்று ஒரு கொடியை வடிவமைத்து டெல்லியில் அதை வெளியிடவும் செய்தார். கொடி கோரிக்கை நிறைவேறவில்லை என்றாலும், “சுதந்திர தின விழாவில் டெல்லியில் பிரதமர் கொடியேற்றுவதுபோல, மாநிலங்களில் முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை வழங்க வேண்டும்” என்ற அவரது கோரிக்கையை பிரதமர் இந்திரா ஏற்றுக்கொண்டார். இன்று நாடு முழுக்க மாநில முதல்வர்கள் கொடியேற்றுகிறார்கள் என்றால், காரணம் கருணாநிதி. 20.4.1974-ல் தமிழக சட்டமன்றத்தில் அவர் அரசு நிறைவேற்றிய “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும்” என்ற மாநில சுயாட்சித் தீர்மானம் இவற்றுக்கெல்லாம் உச்சம்!

கருணாநிதி எதிர்கொண்ட அரசியல் எதிரிகளிலேயே இளையவர், மிகச் சவாலாக விளங்கியவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் ஜெயலலிதாவுடனேயே கருணாநிதியின் அரசியல் கழிந்தது. ஏனைய தலைவர்களுடன் இருந்த நல்லிணக்கம் இவர்கள் இடையே இல்லை. ஆட்சி மாறும்போது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்ற விவாதங்களில் பங்கெடுப்பதைக்கூட இருவருமே தவிர்க்க விரும்பினார்கள். ஆனால், திமுக – அதிமுக இரு கட்சிகளையும் தாண்டி இங்கே யாரும் ஆதிக்கம் செலுத்தாத சூழலை இருவரும் பராமரித்தார்கள். எதிரும் புதிருமாக இருந்தார்கள். ஆனால், ஜெயலலிதா மரணம் அடைந்து அரசியல் களத்திலிருந்து விலகிய அதேசமயம் கருணாநிதியும் உடல் நலம் குன்றி அரசியல் களத்தில் ஓய்ந்திருந்தார்.

நெருக்கடி நிலை யுகத்தின் நாயகன் 

தன்னுடைய அரசியல் வாழ்வில், அவருடைய அரசியல் போட்டியாளர்களுடன் ஒப்பிட பெருமளவில் ஜனநாயகவாதியாக இருந்தார் கருணாநிதி. பத்திரிகைகளால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் அவர். பதிலுக்கு அவரும் பேனாவைப் பிடித்தார். மத்திய அரசு கொண்டுவந்த கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இருந்தார். இந்திய வரலாற்றில் அழியா கரும்புள்ளியான நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

1975 ஜூன் 25-ல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட அடுத்த நாள் அதிகாலையிலேயே ‘இந்திரா காந்தி சர்வாதிகாரத்துக்கான தொடக்க விழாவை நடத்தியிருக்கிறார்’ என்று கண்டன அறிக்கை எழுதினார் கருணாநிதி. எதிர்க்கட்சியினருக்குப் புகலிடம் தந்தார். இந்திராவை எதிர்த்ததால் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. மகன் ஸ்டாலின் உள்பட திமுகவின் முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ‘முரசொலி’ வழியே ஜனநாயகத்துக்காகப் பெரும் தாக்குதல் நடத்தினார் கருணாநிதி. கட்சியையும் கட்டிக் காத்தார்.

டெல்லியில் தேசியக் கட்சிகளின் சர்வாதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, மத்திய ஆட்சியில் மாநிலக் கட்சிகளும் பங்கேற்பதற்கான கூட்டணி யுகத்தின் தளகர்த்தர்களில் கருணாநிதியும் ஒருவர். 1988-ல் ‘தேசிய முன்னணி’ உருவாக்கத்தில் முக்கியமான பங்காற்றினார். தேவகவுடா பிரதமரானபோது ‘இந்தியாவின் தலைநகரம் டெல்லி அல்ல; மெட்ராஸ்’ பத்திரிகைகள் எழுதும் அளவுக்கு கருணாநிதிக்குச் செல்வாக்கு இருந்தது. தமிழ்நாட்டுக்குப் பல முக்கியமான திட்டங்கள் இக்காலகட்டத்தில் கொண்டுவரப்பட்டன. பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதி டெல்லி சென்றால், வாசல் வரை வந்து அவரை வழியனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தமிழில் அதிகம் மேடைகளில் பேசிய, எழுதிய ஆளுமை கருணாநிதி. சட்டமன்றத்தில் கருணாநிதி பேசியவற்றைத் தொகுத்தாலே 1.5 லட்சம் பக்கங்கள் வரும். 21 நாடகங்கள், 16 சமூக, சரித்திர நாவல்கள், 8 கவிதை நூல்கள், 6 தொகுதி தன் வரலாறு இவையெல்லாம் நீங்கலாக அன்றாடம் கட்டுரைகள், கடிதங்கள் வழியே தமிழ் மக்களிடம் உரையாடிக்கொண்டே இருந்தார் கருணாநிதி. கவிஞர், வசனகர்த்தா, நாடகாசிரியர் என்று அவர் எடுத்த அவதாரங்கள் ஏராளம். தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவுக்கு என்று பெரும் நட்சத்திர அந்தஸ்தை அவர் உருவாக்கினார். சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக ‘பராசக்தி’க்கு கதை வசன புத்தகங்கள் வெளியாகி பரபரப்பாக விற்றன. அந்தப் படத்துக்கு அவர் பெற்ற சம்பளம் நாயகன் சிவாஜியைப் போல இரண்டு மடங்கு!

எப்போதெல்லாம் கைதுசெய்யப்பட்டாரோ அப்போதெல்லாம் அரசியலில் பெரும் எழுச்சி பெற்றார் கருணாநிதி. 1953-ல் ‘டால்மியாபுரம்’ பெயரை ‘கல்லக்குடி’ என்று மாற்ற வலியுறுத்தி போராடச் சென்ற கருணாநிதி திடீரென நான்கு பேருடன் ரயில் தடத்தை மறித்து, தலை வைத்துப் படுத்தார். கைது செய்த அரசு ஆறு மாதம் சிறையில் வைத்தது. திமுகவில் கவனத்துக்குரிய தலைவரானார் கருணாநிதி. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, அவரைக் கைது செய்து, அலைக்கழித்து பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைத்தது அரசு. “என் தம்பி கருணாநிதி தனிமைச்சிறையில் கிடக்கும் இந்த இடம் யாத்திரை செய்ய வேண்டிய புண்ணிய பூமி” என்று அண்ணா சொல்லும் நிலைக்கு உயர்ந்தார் கருணாநிதி. எல்லாவற்றுக்கும் உச்சமானது, 78 வயது முதியவர் என்றும் பாராமல் ஜூன் 30, 2001 நள்ளிரவில் கருணாநிதியின் படுக்கை அறைக்குள்ளேயே போலீஸை அனுப்பி, ஜெயலலிதா அரசு செய்த கைது. கருணாநிதியை போலீஸார் இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு இந்தியாவே கொந்தளித்தது. இந்த நெருக்கடியான சூழலிலும் கருணாநிதியிடம் ஒரு காகிதத்தை நீட்டி கைதுகுறித்து எதையாவது எழுதுங்கள் என்றார் பத்திரிகையாளர் ஒருவர். கருணாநிதி சிரித்தபடி ஒரு வரி எழுதிக் கையெழுத்திட்டார்: ‘அநீதி வீழும், அறம் வெல்லும்!’

-நன்றி ஹிந்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *