சென்னை: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஓய்ந்த நிலையில், கடந்த 8 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த சென்னை – ஜம்மு, நகர் பயணிகள் விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காஷ்மீரின் பிரபல சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், வான்வழி போக்குவரத்து சேவையை ஒன்றிய அரசு ரத்து செய்தது.
இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாத நிலைகளை தாக்கி அழித்தது. இதனால் கடந்த 8 நாட்களாக இந்தியாவின் எல்லை பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
தற்போது, போர் பதற்றம் ஓய்ந்த நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளில் மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களும், கடந்த திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கின. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலை 5.50 மணியளவில், எல்லைப் பகுதி விமான நிலையமான ஹிண்டன் நகருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. மேலும் எல்லைப் பகுதியான ஹரியானா மாநிலம் சண்டிகரிலிருந்து, காலை 10.25 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. அதே விமானம் மீண்டும் காலை 11.10 மணியளவில் சண்டிகர் புறப்பட்டு சென்றது.
அதேபோல் சென்னையில் இருந்து டெல்லி வழியாக, ஜம்மு மற்றும் நகருக்கு இணைப்பு விமானங்களும் நேற்று காலை முதல் மீண்டும் இயங்க தொடங்கின. சென்னை விமான நிலையத்தில் இருந்து 8 நாட்களுக்குப் பிறகு மீண்டும் விமானங்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post இந்தியா – பாக் போர் பதற்றம் ஓய்ந்த நிலையில் சென்னையில் இருந்து ஜம்மு, ஸ்ரீநகருக்கு மீண்டும் விமானங்கள் இயக்கம்: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.