கவுகாத்தி: தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னையில் சீனா நேரடியாக ஈடுபட வாய்ப்பில்லை என்று முன்னாள் இந்திய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராணா பிரதாப் காலிதா கூறினார்.
இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராணா பிரதாப் காலிதா அளித்த பேட்டியில் கூறியிருப் பதாவது: கடந்த 2020 கல்வான் சம்பவத்திற்குப் பிறகு, இந்தியா,சீனா நாடுகளுக்கு இடையே பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடைசி உராய்வு புள்ளிகளில் ஏற்பட்ட முட்டுக்கட்டை தீர்க்கப்பட்டுள்ளது. மோதல்களின் கடைசி பகுதிகள் குறித்த பிரச்னை தீர்க்கப்பட்ட பின்னர், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளது. நேரடி விமான சேவைகளைத் தொடங்குவது மற்றும் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்குவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இரு நாடுகளும் அமெரிக்கா விதித்த அதிகரித்த வர்த்தக வரிகளை எதிர்கொள்கின்றன.இந்தியாவும் சீனாவும் உற்பத்தி நாடுகளாகவும், முக்கிய நுகர்வு சந்தைகளாகவும் இருப்பதால், வரி கட்டணங்களில் உயர்வின் தாக்கம் அதிகமாக உணரப்படும். இந்த சிக்கல்கள் மற்றும் புவிசார் அரசியல் நிகழ்வுகளை பார்க்கும்போது, பஹல்காம் சம்பவத்தினால் ஏற்பட்ட உறுதியற்ற தன்மைக்கு சீனர்கள் நேரடியாக தலையிடுவார்களா என்பதை தற்போது கணிப்பது கடினம். ஆனால் இப்போதைக்கு, அவர்கள் நேரடியாக இதில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இல்லை.இருப்பினும், பாகிஸ்தானுடனான சீனாவின் நட்புறவு அனைவரும் அறிந்த உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
The post இந்தியா-பாக். மோதல் விவகாரத்தில் சீனா தலையிடும் வாய்ப்பில்லை: முன்னாள் ராணுவ தளபதி கருத்து appeared first on Dinakaran.