நரேந்திரமோடி தலைமையிலான ஒன்றிய அரசு பதவியேற்ற நாள் முதலாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே வரி’ என்ற கொள்கையை முன்வைத்து மாநிலங்களின் உரிமைகளை சிதைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற பெயரில் இப்போது இந்தியை முன்நிறுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்டவற்றில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியை பொதுமொழியாக்கும் வகையில், ஒன்றிய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் இந்தி திணிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையை பெற்றுள்ளன. ஆனால் அதற்கு மாறாக இந்தியை மட்டும் பொதுமொழியாக்கும் ஒன்றிய அரசின் திட்டங்கள் நடைமுறைக்கு ஒவ்வாதவை. நாட்டை பிளவுபடுத்தும் தன்மை கொண்டவையாகும். கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதில் சந்தேகம் இல்லை. ஒன்றிய அரசின் இத்தகைய முயற்சிகளை முளையிலே கிள்ளி எறிவது மாநிலங்களுக்கு நலம் பயக்கும். தற்போது இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமின்றி மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக்காக திமுக சார்பில் பிரமாண்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு முயற்சிகளை கைவிடக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அனைத்து மொழி பேசுவோருக்கும் சமவாய்ப்பினை வழங்கிடவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே பன்முக தன்மை கொண்ட இந்தியாவில் ஒரு மொழியை ஊக்குவிக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர மக்களாக கருதுவது ஏற்புடையதல்ல. பன்மொழி கூட்டமைப்பு என்ற தேசத்தின் தேன் கூட்டில் ஒன்றிய அரசு கல்லெறிந்தால், ஓடி ஒளிய வேண்டிய நிலை விரைவில் வரும்.