புதுடெல்லி: வங்கதேச இந்து தலைவர் கொலையில் அங்குள்ள தலைமை ஆலோசகருடன் நடந்த பிரதமர் மோடியின் சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளதாக காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது. வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ராஜினாமா செய்த பிறகு, அங்கு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுசுடன் கடந்த 4ம் தேதி பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இந்துக்கள் தாக்கப்படுவது குறித்து தனது எதிர்ப்பை அவர் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் வங்கதேசத்தின் தினாஜ்பூர் நகரில் இந்து சமூக முக்கியத்தலைவர் பாபேஷ் சந்திரராய் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் மோடி சந்தித்து பலன் அளிக்கவில்லை என்று விமர்சனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்டுள்ள பதிவில்,’ வங்கதேசத்தில் இந்து தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற வன்முறைகள் வேரூன்ற அனுமதிக்கப்படும்போது ஒன்றிய அரசின் மவுனமும். செயலற்ற தன்மையும் விரும்பதக்கதல்ல. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அளித்த பதிலின்படி, கடந்த இரண்டு மாதங்களில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது 76 தாக்குதல்கள் நடந்ததாகவும், 23 இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் வங்காளதேசத்தின் தலைமை ஆலோசகர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து மிகவும் கண்டனத்துக்குரிய கருத்தை தெரிவித்தார். இவை எல்லாம் இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையிலான உறவை பலவீனப்படுத்தும் முயற்சிகள்.
1971 முதல் இன்று வரை, இந்திய துணைக் கண்டத்தின் சிறந்த நலனுக்காக இந்தியா எப்போதும் வங்கதேச மக்கள் அனைவருக்கும் அமைதியான, செழிப்பான வாழ்விற்கு துணைபுரிந்து வருகிறது. ஆனால் வங்கதேசத்தில் மத சிறுபான்மையினர், குறிப்பாக நமது இந்து சகோதர, சகோதரிகள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர். வங்கதேச தலைமை ஆலோசகருடன், பிரதமர் மோடி புன்னகையுடன் நடத்திய சந்திப்பு தோல்வியடைந்தது என்பதற்கு இந்து சமூகத்தின் முக்கிய தலைவரான பாபேஷ் சந்திர ராயின் கொடூரமான கொலை சான்றாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post இந்து தலைவர் கொலை; மோடி முயற்சி தோல்வி: காங்கிரஸ் கடும் விமர்சனம் appeared first on Dinakaran.