புதுடெல்லி: கும்பமேளாவில் பலியானவர்களின் உண்மை புள்ளிவிவரங்களை வெளியிடுங்கள் என்று மக்களவையில் அகிலேஷ் ஆவேசமாக பேசினார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டதால் தண்ணீர் மாசுபட்டதாக சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜெயா பச்சன் குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், ‘தற்போது தண்ணீர் எங்கு மிகவும் மாசுபட்டுள்ளது? அது கும்பமேளாவில் உள்ளது.
கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் மாசுபட்டுள்ளது. உண்மையான பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. கும்பமேளாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு எந்த சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படுவதில்லை, அவர்களுக்கான ஏற்பாடும் இல்லை. ஜனவரி 29ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் கும்பமேளாவில் வீசப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை செய்யாமல் கண் துடைப்பு நாடகங்கள் அரங்கேறியுள்ளன. இதே தண்ணீர் அங்குள்ள மக்களைச் சென்றடைகிறது. பாஜக தலைமையிலான அரசாங்கம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அவர்கள் தண்ணீர் மற்றும் ஜல் சக்தி குறித்து உரை நிகழ்த்துகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டதாக அவர்கள் பொய் சொல்கிறார்கள். எந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் எப்படி கூட முடியும்?’ என்றார். இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல எதிர்க்கட்சிகள், உத்தரப் பிரதேச அரசு கும்பமேளாவில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்துவிட்டதாக குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இன்று நாடாளுமன்ற மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘மகா கும்பமேளாவில் இறந்தவர்களுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
குடியரசுத் தலைவரும், பிரதமரும் இரங்கல் தெரிவித்த 17 மணி நேரத்திற்குப் பிறகு தான் மாநில அரசு பக்தர்கள் இறப்பை தெரிவித்தது. இன்றும் மாநில அரசு உண்மையை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. கும்பமேளாவில் சிலர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிந்ததும், அவர்களின் உடல்கள் சவக்கிடங்கிலும் மருத்துவமனையிலும் கிடந்தன. ஆனால் ஹெலிகாப்டரில் பூக்களை நிரப்பி திரிவேணி சங்கமத்தில் பொழிந்தனர். இது என்ன வகையான சனாதன பாரம்பரியம்? அங்கு எத்தனை செருப்புகள், உடைகள் மற்றும் புடவைகள் கிடந்தன என்பது கடவுளுக்கு தெரியும்; ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் டிராக்டர் டிராலிகளைப் பயன்படுத்தி அப்பகுதியை அப்புறப்படுத்தினர். எத்தனை பேர் தூக்கி வீசப்பட்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
மகா கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களையும் தயவுசெய்து வெளியிடுங்கள். கும்பமேளா ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். கும்பமேளா நிர்வாகத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கும்பமேளா விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை, மருந்துகள், மருத்துவர்கள், உணவு, தண்ணீர், போக்குவரத்து ஆகியவற்றின் புள்ளிவிவரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சோகத்திற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; உண்மையை மறைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று குற்றம்சாட்டினார்.
The post இரங்கல் கூட தெரிவிக்காத உத்தரபிரதேச முதல்வர்; கும்பமேளாவில் பலியானவர்களின் உண்மை புள்ளிவிவரங்களை வெளியிடுங்கள்: மக்களவையில் அகிலேஷ் ஆவேசம் appeared first on Dinakaran.