புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் போரால் மனநல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானும் இந்தியா மீது தொடர் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது வடமாநிலங்களான ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், அரியானா உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் இரவு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்தது. அத்துடன், விடிய, விடிய பாதுகாப்பு சைரன்கள் எழுப்பப்பட்டு, மக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டது.
மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் பலரும் தங்கள் செல்போன்களில் போர் தொடர்பான செய்திகளை பார்த்து தங்களை தயார் நிலையில் வைத்திருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் இந்த போரால் பாதிப்பு எதுவும் இல்லையென்றாலும் தென்மாநில மக்கள் உள்பட அனைவரும் சமூக ஊடகங்களில் போர் குறித்த செய்திகளை பார்த்து வந்தனர்.
அதன்படி கேரளாவை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு முன்பு ஒரு பெயராக மட்டுமே தெரிந்த பாகிஸ்தான் இப்போது அவரது தூக்கத்திலும் முனகும் பெயராக மாறி போயுள்ளது. பாகிஸ்தான் நம்மை தாக்கும், நாம் எல்லோரும் இறந்து விடுவோம் என்ற பயத்தில் அந்த சிறுமி உறங்குகிறாள், யாராவது வீட்டின் கதவை தட்டினால் கூட சிறுமி பயப்படுகிறாள் என சிறுமியின் தந்தை வேதனையுடன் கூறியுள்ளார். இதேபோல் டெல்லியை சேர்ந்த 36 வயதான ஒரு நபர், போர் பற்றி சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் உண்மை எது, பொய் எது என்பது தெரியாமல் தன்னைத்தானே துன்புறுத்தி கொள்வதாக செய்திகள் வௌியாகி உள்ளன.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போரால் ஏராளமானோர் மனநல பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என உளவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து உளவியலானர் ஸ்வேதா சர்மா கூறுகையில், “போர் குறித்த தொடர்ச்சியான பேச்சுகள், மோதல் நடக்கும் பகுதிகளிலிருந்து வெகுதூரத்தில் வசிக்கும் மக்களுக்கு கூட ஒரு தீவிர அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 24 மணி நேர செய்தி சேனல்கள், சமூக ஊடகங்களில் போர் பற்றிய உணர்ச்சி வசப்பட்ட உள்ளடக்கம் போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
போர் பற்றிய பேச்சுகள் அச்சத்தை தூண்டும், இளம் மனங்கள் மிக எளிதில் பாதிக்கப்படும். அவர்களின் பாதுகாப்பு உணர்வை சீர்குலைக்கும். இதுபோன்ற நேரங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகளை பொறுத்தவரை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகையில் போர் குறித்த நிலைமையை விளக்க வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை பார்ப்பதை நாமும் தவிர்க்க வேண்டும், குழந்தைகள் பார்ப்பதையும் தடுத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
The post இருட்ட பாத்தா பயம்.. குண்டு, துப்பாக்கி சத்தம் கேட்டா பயம்.. இந்தியா – பாக். போரால் மனநலம் பாதிக்கும் அபாயம்: உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.