சென்னை: வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, வெளிநாட்டுக்கு கடந்த 2016-ல் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்று அவர் கடன் வாங்கியிருந்த வங்கிகளுக்கு ரூ.14,131.6 கோடி திருப்பி அளிக்கப்பட்டது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார். அதை சுட்டிக்காட்டி தன்னிடமிருந்து இரு மடங்கு கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வட்டியுடன் சேர்த்து மொத்த கடன் ரூ.6,203 என கடன் மீட்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அமலாக்கத் துறை மூலம் வங்கிகள் என்னிடம் இருந்து ரூ.14,131.60 கோடியை வசூலித்துள்ளது. என்னை இன்னும் ஒரு பொருளாதார குற்றவாளி என்றே நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் குறிப்பிடுகிறார். என்னிடமிருந்து அமலாக்கத் துறை மற்றும் வங்கிகள் இரண்டு மடங்கு கடனை எப்படி எடுத்தார்கள் என்பதை சட்டபூர்வமாக நியாயப்படுத்த முடியாவிட்டால், அது தொடர்பாக நிவாரணம் கோர எனக்கு உரிமை உண்டு.” என பதிவிட்டுள்ளார்.