காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த ஆனந்த்வேலின் விசை படகில் காரைக்கால், மயிலாடுதுறை, நாகையை சேர்ந்த 13 மீனவர்கள் கடந்த 26ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி படகை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் கடலில் குதித்ததில் மீனவர்கள் செந்தமிழ், பாபு ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் லேசர் விளக்குகளை அடித்து துப்பாக்கி சூடு நடத்தும் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடுக்கடலில் மீனவர்கள் தவிப்பதும், இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி மீனவர்களை சுற்றிவளைக்கும் காட்சிகளும் வெளியானதுகடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டன போஸ்டர்கள்
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மீனவ சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
கடற்படையினர் தவறுதலாக சுட்டனர்: இலங்கை தளபதி விளக்கம்
இலங்கை கடற்படை தலைமை தளபதி காஞ்சனா பனகோடா கூறுகையில், ‘‘இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடந்த சம்பவம் தவறுதலாக நடந்துள்ளது. இந்தியர்கள் மீது இலங்கை கடற்படை வேண்டும் என்று துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. இலங்கை கடற்பகுதியில் இந்திய மீன்பிடி படகு ஒன்றைக் கண்ட கடற்படை வீரர்கள், அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
அதற்கு அவர்கள் இணங்காததால், சந்தேகம் காரணமாக அவர்களை கடற்படை வீரர்கள் படகில் ஏற்றினர். அவர்கள் கடற்படை படகில் ஏறியபோது, விசாரணைக்கு இடையூறு செய்யும் வகையில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர். கடற்படை வீரர்கள் விசாரணையை தடுத்த போது துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. 2 மீனவர்கள் படுகாயமடைந்தனர்’’ என்றார்.
The post இலங்கை கடற்படை நடத்திய அட்டூழியம்; லேசர் விளக்குகளை அடித்து மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: பதைபதைக்கும் வீடியோ காட்சி வைரல் appeared first on Dinakaran.