உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன், அன்றிரவு 7 மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 8ம் தேதி இரவு கம்பம் போடுதலும், 10ம் தேதி இரவு 12 மணிக்கு வாஸ்துசாந்தி, கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றது. 11ம் தேதி மதியம் 12.30 மணி அளவில் கொடியேற்றமும் மதியம் 2 மணிக்கு பூவோடு ஆரம்பமும் நடைபெற்றது.
இந்நிலையில் நாள்தோறும் உடுமலை சுற்றுவட்டார கிராம மக்கள் கோயிலில் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு நாளும் அம்மன் காமதேனு வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று மாவிளக்கு பூஜை நடைபெற்றது. மாலை அளவில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. சூலத்தேவருடன் மாரியம்மன் திருமணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு களித்தனர். தொடர்ந்து திருக்கல்யாண விருந்து நடைபெற்றது.
நேற்றிரவு மாரியம்மன் மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று காலை 6.45 மணிக்கு மாரியம்மன் சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். பிற்பகல் 3.15 மணிக்கு பரிவட்டம் கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.15 மணி அளவில் தேரினை அமைச்சர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு நகர் முழுவதும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
காலை முதலே பல்வேறு வகை உணவு வகை மற்றும் குளிர்பானங்களை வெள்ளரி, தர்பூசணி, வாழைப்பழம் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு தொழில் நிறுவனங்களும்,அரசியல் கட்சி பிரமுகர்களும்,சமூக ஆர்வலர்களும் வழங்கி வருகின்றனர். போக்குவரத்து மாற்றம்: இன்று பிற்பகல் முதல் இரவு வரை நகரின் முக்கிய வீதிகளில் தேரோட்டம் நடைபெற இருப்பதால் பொள்ளாச்சியில் இருந்து பழனி செல்லும் வாகனங்கள் ராகல்பாவி பிரிவு முதல் புதிய பைபாஸ் சாலை, பெதப்பம்பட்டிரோடு, புதிய பைபாஸ், திருப்பூர் ரோடு புதிய பைபாஸ், தாராபுரம் ரோடு புதிய பைபாஸ், தாராபுரம் ரோடு, 100 அடி ரோடு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழியே பேருந்து நிலையத்தை அடையலாம்.
இதே போல பழனியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மத்திய பேருந்துநிலையம், தாஜ் தியேட்டர், தாராபுரம் ரோடு, புதிய பைபாஸ் ரோடு, திருப்பூர் ரோடு புதிய பைபாஸ்,பெதப்பம் பட்டிரோடு, புதிய பைபாஸ்,ராகல் பாவி பிரிவு, புதிய பைாஸ் வழியாக பயணிக்கலாம். தளி,அமராவதி செல்வோர் மத்திய பேருந்து நிலையம், சந்தை ரோடு, ராமசாமி ரோடு, ரயில்வே கேட் தளி மேம்பாலம் போடிபட்படி, வழியாக சென்றும் திரும்ப அதே சாலையில் வந்து மத்திய பேருந்து நிலையத்தை அடையும்படி போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
The post உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.