பிரயாக்ராஜ்: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நாளை ெதாடங்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில், ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் மிக பெரிய ஆன்மிகம், கலாசாரம் நிகழ்வாக கருதப்படுவது மகா கும்பமேளா, ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும்.
இந்த மகா கும்பமேளா நாளை (ஜன. 13) தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறும். இந்த மகா கும்பமேளா மகா சிவராத்திரியுடன் கோலாகலமாக நிறைவுபெறவுள்ளது. 40 கோடி மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் (61) பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியா வருகிறார். அவர் நிரஞ்சனி அகாராவின் மகா மண்டலேஷ்வர் சுவாமி கைலாஷ் ஆனந்த் மகராஜ் முகாமில் 17 நாட்கள் தங்கியிருப்பார்.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். குறிப்பாக அவர் கல்பவாசம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து கைலாஷ் ஆனந்த் கூறும்போது, ‘மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக லாரன் பாவெல் வருகிறார். அவர் இங்கு தியானம் செய்ய உள்ளார்.
அவருக்கு கமலா என நாங்கள் பெயர் வைத்துள்ளோம். அவர் எங்களுக்கு மகள் போன்றவர். அவர் இந்தியாவுக்கு 2வது முறையாக வரவுள்ளார். லாரன் பாவெலை சாதுக்கள் பேரணியில் பங்கேற்பார். அவரது பயணத்தின்போது பல்வேறு ஆன்மிக குருக்களை சந்திப்பார்.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த விழாவுக்கு வந்து ஆசி பெறுவார்கள்’ என்று கூறினார். முன்னதாக ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பாவெல், மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக நேற்று உத்தரபிரதேசம் வந்தடைந்தார். அவர் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.
The post உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நாளை தொடக்கம்: ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி பங்கேற்பு appeared first on Dinakaran.