ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரிநீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆபத்தான முறையில் குளித்து வருவதால், அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பெரிய அளவிலான தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை மழை காலத்தில் தண்ணீர் நிரம்பினால் ஒரு பகுதி சோழவரம் ஏரிக்கும், மற்றொரு பகுதி கடலுக்கும் செல்லும்.
இதனையடுத்து, தாமரைப்பாக்கம், செம்பேடு, வெள்ளியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததாலும், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று முன்தினம் 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பின்னர், நேற்று 2000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் இந்த தண்ணீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் உள்ள தடுப்பணையில் நிரம்பி சீறிப்பாய்ந்து செல்கிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் பெய்த மழைநீர் ஆறு, ஏரி, குளங்களில் நிரம்பியது. இதில், யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்று தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரிநீரில் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள், சிறுவர்கள் குளித்தும், பெரியவர்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை கழுவியும் வருகிறார்கள்.
தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீரில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளியூரை சேர்ந்தவர்களும் ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், தடுப்பணையில் உள்ள தடுப்புகளை பிடித்து இழுக்கிறார்கள். இதனால், தடுப்புகள் உடைந்து தண்ணீரின் வேகம் அதிகரித்தால் குளிப்பவர்கள் தண்ணீரில் அடித்து செல்லும் ஆபத்தும் ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே, தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post உபரிநீரில் உற்சாக குளியல் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.