புதுடெல்லி: புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது மனிதாபிமானமற்ற செயல் என உபி அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பாஜ ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குற்றவாளிகள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தும் இந்த செயலை உபி அரசு தொடர்ந்து செய்கிறது.
இது போல, கடந்த 2023ம் ஆண்டு போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடியும், அரசியல்வாதியுமான அதிக் அகமதுவுக்கு சொந்தமான கட்டிடங்கள் என தவறுதலாக மற்றவர்களின் வீடுகள் இடிப்பட்டதாக கூறப்படுகிறது. பிரக்யாராஜில் லுகர்கஞ்ச் பகுதியில் கடந்த 2021 மார்ச் 6ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சுல்பிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது உள்ளிட்டோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உஜ்ஜல் புயான் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘பிரயாக்ராஜில் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பது மனிதாபிமானமற்றது, சட்டவிரோதமானது. இது சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாடு. இங்கு உரிய செயல்முறைகளை பின்பற்றாமல் புல்டோசர் மூலம் இடித்து தள்ளுவது எங்களின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. வீடு என்பது குடிமக்களின் உரிமை. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 வாரத்தில் தலா ரூ.10 லட்சம் இழப்பீட்டை உபி அரசு மற்றும் பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
The post உபி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது மனிதாபிமானமற்றது: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் தர உத்தரவு appeared first on Dinakaran.