மும்பை: உருவ கேலி விமர்சனத்தால் மனதளவில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அழகாக முதுமையடைவதையே விரும்புகிறேன் என்று பாஜக பிரமுகரான நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். பிரபல நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு, தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு, பிரபலங்கள் மீதான விமர்சனங்களும், கேலிகளும் அதிகரித்துவிட்டன. குறிப்பாக, நடிகைகளின் உடல்வாகு, உடை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.
உருவ கேலி கலாசாரத்தால் பல பிரபலங்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எங்களது மகள்களின் உயரத்தையும், உடல்வாகையும் சமூக ஊடகங்களில் பலர் கேலி செய்தனர். ஆனால் நான் பொருட்படுத்தவில்லை. யாரோ முகம் தெரியாத நபர்கள் நமது தோற்றத்தைக் கேலி செய்வதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு நாம் கருத்துச் சொல்ல வேண்டியதும் இல்லை. இதனை எனது மகள்களுக்குப் புரிய வைத்தேன். சமீபத்தில், மாடல் அழகியும், நடிகையுமான ஷெபாலி ஜரிவாலாவின் திடீர் மரணம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இன்றைய தலைமுறையினரும், திரைத்துறையினரும் அதிகளவு மன அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் எதையோ இழந்துவிடுவோமோ அல்லது பின்தங்கி விடுவோமோ என்ற பயம் அவர்களிடம் உள்ளது. திரைத்துறைக்குள் இருக்கும் சக நடிகர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் கொடுக்கும் அழுத்தத்தை விட, சமூக ஊடகங்கள் வழியாக வரும் வெளிப்புற அழுத்தமே மிகவும் கொடியது.
தலைமுடி கலைந்திருந்தாலோ, மேக்கப் சற்று அழிந்திருந்தாலோ கூட, அதை வைத்து வரும் விமர்சனங்கள் கூட நடிகைகளுக்கு பெரும் பதற்றத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்துகின்றன. எனது சினிமா காலத்தில் சமூக ஊடகங்கள் இல்லாததால், இதுபோன்ற அழுத்தங்கள் இல்லை. உண்மையான ரசிகர்கள் தங்களை உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொண்டார்கள். இப்போதும் எனக்கு நானே ஒப்பனை செய்துகொள்கிறேன்; எனக்கென ஆடை வடிவமைப்பாளர் யாரும் இல்லை. வாழ்க்கையின் யதார்த்தங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாதபோதுதான் பிரச்னைகள் தொடங்குகின்றன.
முதுமையைத் தடுக்கும் சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதில் தவறில்லை; ஆனால் எங்கு அதனை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற எல்லை தெரிய வேண்டும். என் முகத்தில் சுருக்கங்கள் உள்ளன; அவற்றை ஏற்றுக்கொள்கிறேன். அழகாக முதுமையடைவதையே விரும்புகிறேன். 20 வயதுப் பெண்ணைப் போல மாற வேண்டும் என நினைப்பது சாத்தியமற்றது. பெண்கள் தங்கள் வெளித்தோற்றத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை, உள் ஆரோக்கியத்திற்கும் அளிக்க வேண்டும். பலரும் இதைத் தவறவிடுகின்றனர். பெண்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்’ என்று அவர் அறிவுறுத்தினார்.
The post உருவ கேலி விமர்சனத்தால் மனதளவில் பாதிப்பு; 20 வயது பெண்ணை போலவே என்றுமே இருக்க முடியுமா?: முதுமை குறித்து பாஜக பிரமுகரான நடிகை குஷ்பு பேட்டி appeared first on Dinakaran.