டெல்லி: உலகில் 500 மதிப்புமிக்க பிராண்டுகளின் பட்டியலில் இந்தியாவின் 15 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு டாடா குழுமம் 60வது இடத்தை எட்டியுள்ள நிலையில், புதிதாக எஸ்.பி.ஐ. ஜியோ உள்ளிட்ட 5 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. குளோபல் பிராண்ட் லிஸ்ட் எனப்படும் பன்னாட்டு அளவில் புகழ்பெற்று விளங்கும் 500 நிறுவனங்களின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. உலகின் அனைத்து துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான பெரிய பிராண்டுகளை ஆய்வு செய்து அவற்றின் பிரண்டு மதிப்புகளின் அடிப்படையில் நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் பட்டியல் இது.
நடப்பாண்டுக்கான இந்த பட்டியலில் 15 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. உப்பு முதல் மென்பொருள் வரை தயாரித்து வரும் இந்தியாவின் டாடா குழுமம் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. மதிப்புமிக்க 500 பன்னாட்டு பிராண்டுகளில் டாடா 60வது இடத்தினை பிடித்துள்ளது. 132வது இடத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனம் உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் எல்.ஐ.சி. ஆகிய நிறுவனங்கள் முறையே 164 மற்றும் 177 ஆகிய இடங்கள் பிடித்துள்ளன. ரிலையன்ஸ் குழுமம் 237வது இடத்திலும், எஸ்.பி.ஐ. 241வது இடத்திலும், ஹெச்.சி.எல். 262வது இடத்திலும் இருக்கின்றன.
பட்டியலில் 306 முதல் 375 வரை உள்ள இடங்களில் இந்தியாவின் ஏர்டெல், எல் அன்ட் டி குழுமம், மஹேந்திரா, விப்ரோ, ஜியோ, ஐ.சி.ஐ.சி.ஐ. ஆகிய நிறுவனங்களும் உள்ளன. பாஜாஜ் 409வது இடத்தையும், இந்தியன் ஆயில் நிறுவனம் 446வது இடத்தையும் தனதாக்கி உள்ளன. உலகின் 500 மதிப்புமிக்க பிராண்டுகளின் பட்டியலில் இந்த ஆண்டு புதிதாக ஹெச்.டி.எஃப்.சி., எஸ்.பி.ஐ., எல் அன்ட் டி குழுமம், ஜியோ, ஐ.சி.ஐ.சி.ஐ. ஆகிய இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post உலகில் மதிப்புமிக்க 500 பிராண்டுகளின் பட்டியலில் இந்தியா நிறுவனங்கள்: 60வது இடத்தை தனதாக்கியது டாடா குழுமம் appeared first on Dinakaran.