சென்னை: உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர் பிரணவ் வெங்கடேஷுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டு துறையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதற்கேற்ப, தேசிய, சர்வதேச அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.