ஆரோக்கியம், மருத்துவம்

நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை –உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Having failed to anti-retroviral drugs - the World Health Organization warns

 

உலகம் ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் காலத்துக்குப் பிந்தைய ஒரு காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

இத்தகைய ஒரு காலகட்டத்தில், மக்கள் சாதாரண தொற்றுக்களாலும், சிறிய காயங்களாலும் உயிரிழக்கக்கூடிய ஒரு நிலை மீண்டும் உருவாகும் நிலை வரலாம் என்று அது கூறுகிறது.

 

சூப்பர் பக்ஸ் எனப்படும் நோயை உண்டாக்கும் கிருமிகள், உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டிபயாடிக்ஸ்களிடமிருந்துகூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருப்பதாகவும்,இது இப்போது உலக அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதாகவும், உலகச் சுகாதார நிறுவனம், ஆண்டிபயாடிக்ஸ் செயலற்றுப் போகும் நிலை குறித்து வெளியிட்டுள்ள முதல் உலகளாவிய அறிக்கையில் கூறுகிறது.
இத்தகைய நோய் எதிர்ப்பு மருந்துகளை தேவைக்கதிகமாக பரிந்துரைப்பதும், நோயாளிகள் இத்தகைய மருந்துகளை உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்துவது போன்ற, துஷ்பிரயோகங்களும் இதற்குக் காரணம் என்று அது கூறியது.

இதனால் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழப்பது என்பது, எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று அது கூறியது.

புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவாக உருவாக்கப்படவேண்டும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், இவைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்க, மேலும் சிறந்த கண்காணிப்பு முறைகள் அவசியம் என்று கூறுகிறது.

பிபிசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *