கான்பூர்: உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பாஜக மாஜி எம்எல்ஏ – சுயேச்சை எம்எல்ஏ இடையே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் உத்தரகாண்ட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும், பாஜக தலைவருமான குன்வர் பிரணவ் சிங் சாம்பியன் தனது ஆதரவாளர்களுடன், கான்பூரில் இருக்கும் தற்போதைய சுயேச்சை எம்எல்ஏ உமேஷ் குமாரின் அலுவலகத்தை நோக்கி சென்றார். அங்கு உமேஷ் குமாரின் ஆதரவாளர்களும் கூடி இருந்தனர்.
திடீரென இரு தரப்பினரும் பயங்கரு ஆயுதங்களுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். குன்வர் பிரணவ் சிங்கின் ஆதரவாளர்கள் சிலர் காரில் இருந்து இறங்கியதும், உமேஷ் குமாரின் அலுவலகத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். கோபமடைந்த எம்.எல்.ஏ உமேஷ் குமார், தனது கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு குன்வர் சிங்கின் ஆதரவாளர்களை நோக்கி ஓடினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் லேசான தடியடி நடத்தி அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டதால் டேராடூன் போலீசார் முன்னாள் எம்எல்ஏ குன்வர் பிரணவ் சிங் சாம்பியனை கைது செய்து ஹரித்வார் போலீசிடம் ஒப்படைத்தனர். அப்போது அவர், ‘எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது’ என்றார். இதற்கிடையே எம்எல்ஏ உமேஷ் குமார் மீது குன்வர் பிரணவ் சாம்பியனின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்வாலி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குன்வர் பிரணவ் சிங் கைது குறித்து எம்எல்ஏ உமேஷ் குமார் கூறுகையில், ‘குன்வர் பிரணவ் சிங்கின் ஆதரவாளர்கள் லாண்தௌரா மற்றும் தண்டேராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர்.
அதையடுத்து தனது 50 ஆதரவாளர்களுடன் எங்களை தாக்க வந்துள்ளார். பதவியில் இருக்கும் எம்எல்ஏ மீது இதுபோன்ற தாக்குதலை நான் பார்த்ததில்லை’ என்றார். இச்சம்பவம் குறித்து ஹரித்வார் எஸ்பி பிரமேந்திர தோவல் கூறுகையில், ‘தற்போதைய எம்எல்ஏவின் அலுவலகத்தை நோக்கி முன்னாள் எம்எல்ஏ துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் வீடியோவை சமூக ஊடகங்களில் பார்த்து அறிந்து கொண்டோம். இந்த விவகாரம் தொடர்பாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மகேந்திர பட் கூறுகையில், ‘கடந்த 2 நாட்களாக ஹரித்வாரில் நிலவும் சூழல் ஆரோக்கியமானதாக இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் கூறியுள்ளேன்’ என்றார். இந்த விஷயம் கட்சியின் கவனத்திற்கு வந்துள்ளது, கடந்த கால அல்லது தற்போதைய எங்கள் பிரதிநிதிகள் யாரையும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க அனுமதிக்க மாட்டோம்’ என்றார். பாஜக முன்னாள் எம்எல்ஏவுக்கும், சுயேச்சை எம்எல்ஏவுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ெதாடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இரு தரப்பு மோதலால் உத்தரகாண்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post உள்ளாட்சி தேர்தலில் தோல்வி; பாஜக மாஜி எம்எல்ஏ சுயேச்சை எம்எல்ஏ இடையே துப்பாக்கிச்சூடு; பயங்கர ஆயுதங்களுடன் மோதல்; உத்தரகாண்ட்டில் பதற்றம் appeared first on Dinakaran.