லக்னோ : உ.பி. பிரயாக்ராஜில் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர்.உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் நிலையில், இன்று தை அமாவாசையையொட்டி, அதிகாலையிலேயே பல லட்சம் பக்தர்கள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடல்கள் அடிப்படையில் 31 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் 70-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே விடுத்த இரங்கல் செய்தியில், “உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு அரைகுறையான ஏற்பாடுகள், நிர்வாக குளறுபடியே காரணம். வி.ஐ.பி.க்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்ததால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறையும் கூட்டநெரிசலுக்கு காரணம். எதிர்காலத்தில் பக்தர்கள் அதிகம் பேர் வருவார்கள் என்பதால் போதுமான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். உணவு, முதலுதவி பக்தர்கள் வந்து செல்ல போதிய பாதைகளை அமைத்து தர வேண்டும், “இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட செய்தியில், “உ.பி. மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலுக்கு நிர்வாக குளறுபடிகளே காரணம். கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே கும்பமேளாவில் உயிரிழந்தோர் எத்தனை பேர் என்ற விவரத்தை இதுவரை உத்தரப்பிரதேச அரசு அறிவிக்கவில்லை. கூட்ட நெரிசல் ஏற்பட்டு 8 மணி நேரத்துக்கு மேலாகியும் உயிரிழப்பு, காயமடைந்தவர்கள் குறித்த விவரம் அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தை 3 முறை தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post உ.பி. கும்பமேளாவில் 31 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம் என குற்றச்சாட்டு : மீட்பு நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு appeared first on Dinakaran.