புதுடெல்லி: உ.பி. பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவரி 13ம் தேதி தொடங்கி பிப்.26 வரை மகா கும்பமேளா நடக்கிறது.12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவை முழு கும்பமேளா அல்லது பூரண கும்பமேளா என்று அழைப்பார்கள். 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று புனித நீராடி வருகிறார்கள். இதுவரை 38 கோடி பேர் புனித நீராடியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு மகா கும்பமேளா நடக்கும் திரிவேணி சங்கமத்தில் படகில் சென்று புனித நீராடினார். அதை தொடர்ந்து கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்து வழிபாட்டார். இதனிடையே பிரதமர் மோடியின் கும்பமேளா புனித நீராடல், தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும் என இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.முன்னதாக கடந்த வாரம், காவி வேட்டி அணிந்தபடி திரிவேணி சங்கத்தில் அமித் ஷா புனித நீராடினார். யோகி ஆதித்யாநாத், பாபா ராம்தேவ் உள்பட பல்வேறு துறவிகள் அவருடன் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post உ.பி. பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.