டெல்லி : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்கில் மேல் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது நடவடிக்கை கோரி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், இந்த புகார் குறித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யுமாறு சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவு எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்கில் மேல் நடவடிக்கைக்கு தடை விதித்தனர். அத்துடன், வழக்கில் பதில் தர எதிர்மனுதாரர், தமிழ்நாடு அரசு, மிலானிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
The post எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்கில் மேல் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை appeared first on Dinakaran.