மதுரை: என்கவுன்டர்கள் அதிகரித்து வருவதாக கூறியுள்ள ஐகோர்ட் கிளை, ரவுடிகளை முழங்காலுக்கு கீழே சுட்டுப்பிடியுங்கள் என போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது. திருச்சியைச் சேர்ந்த சத்யஜோதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எனது சகோதரர் வெள்ளைக்காளி (எ) காளிமுத்து. சென்னை புழல் சிறையில் தண்டனை சிறைவாசியாக உள்ளார். கடந்த மாதம் கிளாமர் காளி என்ற ரவுடி மதுரையில் கொலை செய்யப்பட்டார். இதில் எனது சகோதரர் மற்றும் அவரது குடும்பத்திற்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் உள்நோக்கத்துடன் அந்த கொலையில் எனது சகோதரரையும் தொடர்புபடுத்தி, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் என்ற நபர் சமீபத்தில் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
எனது சகோதரரையும் இந்த வழக்கில் தொடர்பு படுத்தி அவருக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அவரை என்கவுன்டர் செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே, எனது சகோதரரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தவும், அனைத்து விசாரணைகளையும் வீடியோ பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்தேன். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், விசாரணை எனும் பெயரில் அழைத்துச் சென்று என்கவுன்டர் செய்யப்படும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘சமீப காலமாக என்கவுன்டர் அதிகரித்து உள்ளது. எத்தனை என்கவுன்டர்கள் சமீபமாக நடைபெற்றுள்ளன? காவல்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். ரவுடிகளை முழங்காலுக்கு கீழ் சுட்டுப்பிடியுங்கள். காவல் துறையினரின் பாதுகாப்புக்காக மட்டும் தான் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார். அப்போது அரசு தரப்பில், காவல்துறையில் இருவர் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனு மீதான விசாரணையை ஏப். 29க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
The post என்கவுன்டர்கள் அதிகரித்து வருகிறது; ரவுடிகளை முழங்காலுக்கு கீழே சுட்டுப் பிடியுங்கள்: போலீசாருக்கு ஐகோர்ட் கிளை அறிவுரை appeared first on Dinakaran.