நாக்பூர்: எனது அமைச்சகத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அதை ஊடகங்கள் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஊடகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நாக்பூர் ஹீரோஸ்’ என்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘உங்களுக்கான அங்கீகாரமும் மரியாதையும் உங்களது ஆளுமையிலிருந்து வருவதில்லை; அவை உங்களது குணங்களிலிருந்து தான் வருகின்றன. இப்போதெல்லாம் நல்ல பணிகளை செய்தால் யாரும் பாராட்டுவதில்லை.
தவறான விஷயங்கள், சமூகத்திற்கு தேவையற்ற விசயங்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகின்றன. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது செய்தித்தாள்கள், ஊடகங்கள் மட்டுமின்றி அனைவரின் பொறுப்பும் உள்ளது. ஊடகங்கள் தவறான விஷயங்களைக் கண்டிக்க வேண்டும். நேர்மறையான விஷயங்களைப் பாராட்ட வேண்டும். நல்ல விஷயங்களை சமூகத்தின் முன்பு கொண்டு வர வேண்டும்; அதே நேரத்தில் என்ன தவறு என்பது பற்றிய விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
எனது நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தில் ஏதேனும் தவறு நடந்திருந்தாலோ அல்லது ஒப்பந்ததாரர் யாராவது முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அதனை வெளிப்படுத்துங்கள்; அவ்வாறு முறைகேட்டில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டால், அவர்களை கருப்புப் பட்டியலில் சேர்த்து விடுவோம். தேவைப்பட்டால் அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். எனவே எனது அமைச்சகத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அதை ஊடகங்கள் கடுமையாகக் கண்டிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
The post என்னுடைய துறையின் அமைச்சகத்தில் முறைகேடு நடந்தால் அம்பலப்படுத்துங்கள்: ஊடகங்களுக்கு நிதின் கட்கரி வேண்டுகோள் appeared first on Dinakaran.