ராய்ப்பூர்: நீதிமன்ற தீர்ப்புகளையே செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை பயன்படுத்தி அசால்டாக எழுதி முடிக்கும் இந்த காலத்திலும், சட்டீஸ்கர் நிதி அமைச்சர் ஓ.பி.சவுத்ரி 100 பக்க பட்ஜெட் ஆவணங்களை தனது கைப்பட எழுதி உள்ளார்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஓ.பி.சவுத்ரி, மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் புகுந்தவர். சட்டீஸ்கர் மாநில நிதி அமைச்சராக உள்ள இவர் கடந்த 4ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் ஆவணம் 100 பக்கங்கள் கொண்டது. இதை அனைத்தையும் அமைச்சர் சவுத்ரி தனது கைப்பட எழுதி உள்ளார்.
பொதுவாக பட்ஜெட் ஆவணங்கள் அதிகாரிகள் குழுக்களாலோ அல்லது கம்ப்யூட்டர் மூலம் தட்டச்சு செய்தோ முடிக்கப்படுவது வழக்கம். ஆனால், சவுத்ரி கையாலேயே எழுதி முடித்து தனது தனிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வை காட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘பட்ஜெட்டை கையால் எழுதுவதன் மூலம் அது எனது உணர்வுகள், எனது உணர்ச்சிகள், எனது பார்வை, எனது அர்ப்பணிப்பு, எனது பற்றுதலை அதிகம் வெளிப்படுத்துவதாக உணர்ந்தேன். அதனால் கைப்பட எழுதினேன். பட்ஜெட் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடந்தாலும், பட்ஜெட் அம்சங்களை 10 நாட்கள் எழுதினேன். இதில் 4 நாட்கள் தூங்கவே இல்லை. வெறும் 1 மணி நேரம் மட்டும் ஓய்வெடுத்திருப்பேன்’’ என்றார். இதன் மூலம் ஏஐ காலத்தில் இப்படியும் ஒருவரா என நினைக்க வைத்துள்ளார்.
The post ஏஐ காலத்திலும் இப்படி ஒருவரா? 100 பக்க பட்ஜெட்டை கைப்பட எழுதிய சட்டீஸ்கர் அமைச்சர்: 4 நாள் தூக்கமின்றி முடித்தார் appeared first on Dinakaran.