கோவை: தொழில் நகரான கோவையில் அதிகரித்துவரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிறுவனங்களால் வரும்காலத்தில் ஏ.ஐ. மையமாக திகழும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கல்வி, மருத்துவம், வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா 500 பில்லியன் டாலர் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் ரூ.500 கோடியில் செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நகரான கோவையில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகரித்துவரும் நிலையில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. மேலும் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய பெருநகரங்களை தவிர்த்து தொழில்துறை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக அதிக வேலை வாய்ப்பு வழங்கும் நகராக கோவை மாறிவருகிறது.