திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி ஏரியில் குப்பைகளை வீசிய பிரபல மலையாள பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கேரளாவில் ஏரிகள், குளங்கள், பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதை வீடியோ அல்லது போட்டோ எடுத்து நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசும் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சியில் உள்ள ஏரியில் அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து குப்பைகளை வீசுவதை ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது குறித்து அறிந்த கேரள உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ், உடனே நடவடிக்கை எடுக்க பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து பஞ்சாயத்து அதிகாரிகள் நேரடியாக சென்று நடத்திய விசாரணையில் அங்குள்ள பிரபல மலையாள சினிமா பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமாரின் வீட்டில் இருந்து தான் குப்பைகள் வீசப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டக்கோரி அவருக்கு முளவுகாடு பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதன்படி பாடகர் எம்.ஜி. ஸ்ரீகுமார் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினார். இந்த விவரத்தை சமூக வலைதளம் மூலம் தெரிவித்த அமைச்சர் ராஜேஷ், தகுந்த ஆதாரங்களுடன் வீடியோ எடுத்து அனுப்பிய நபருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எம்.ஜி. ஸ்ரீகுமார் தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார்.
The post ஏரியில் குப்பைகளை வீசிய பிரபல மலையாள பாடகருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் appeared first on Dinakaran.