திருமலை: ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசிக்க கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று செயல் அதிகாரி ஷியாமளாராவ் தெரிவித்தார். திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற அதன் தலைவர் பி.ஆர்.நாயுடு பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
உலகம் முழுவதும் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு தெலுங்கு யுகாதி வாழ்த்துக்கள். கடந்த 21ம்தேதி திருமலைக்கு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, சில முக்கிய பிரச்னைகள் குறித்து தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி முந்தைய அரசாங்கத்தின்போது திருப்பதி மலை அடிவாரத்தில் தனியார் ஓட்டல்களுக்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டை ரத்து செய்வது. அலிபிரியை ஒட்டிய பகுதிகளில் வணிக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது என்று அறங்காவலர் குழு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேவஸ்தானம் சார்பில் கோயில் கட்ட வேண்டும் என அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் நிலம் ஒதுக்கக்கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள், இதற்கு முன்வந்துள்ள நிலையில் மற்ற மாநில முதல்வர்களுடன் தானே பேசுவதாக முதல்வர் சந்திரபாபுநாயுடு தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைனில் தரிசன டிக்கெட் வழங்கப்படுவதால் பலர் முன்பதிவு செய்ய முடியவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே ஆப்லைனில் வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து செயல் அதிகாரி ஷியாமளா ராவ் பேசுகையில், ‘திருமலையில் முக்கிய பிரமுகர்களுக்கான அறைகளை போன்று சாதாரண பக்தர்களுக்கு தரமான அறைகளை ஒதுக்கீடு செய்வதற்காக 14 பிளாக்கில் உள்ள 1375க்கும் அறைகளை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஏ.ஐ. டெக்னாலஜி மூலம் விரைவான தரிசனத்திற்கும், உடமைகள் பெற்று வழங்க முகம் அடையாளங்களை பயன்படுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
ரூ.5,258 கோடி பட்ஜெட்டிற்கு ஒப்புதல்
அறங்காவலர் குழு கூட்டத்தை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் ரூ.5,258.68 கோடியில் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்தாண்டு ரூ.1,671 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.1,729 கோடி காணிக்கை கிடைக்கும். கடந்த ஆண்டு தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் வைத்திருக்கும் நிரந்தர வைப்பு நிதிக்கு ரூ.1,253 கோடி வட்டி கிடைத்தது. வரும் நிதியாண்டில் ரூ.1,310 கோடி கிடைக்கும்.
அதேபோல் கடந்தாண்டு லட்டு உள்ளிட்ட பிரசாத விற்பனை மூலம் ரூ.550 கோடி கிடைத்தது. வரும் ஆண்டில் ரூ.600 கோடி கிடைக்கும். தரிசன டிக்கெட்டுகள் மூலம் ₹305 கோடி கிடைத்த நிலையில், ரூ.310 கோடி வரும் ஆண்டில் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊழியர்களின் ஊதியத்திற்கு ரூ.1,773 கோடியே 75 லட்சமும், பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்ய ரூ.768 கோடியே 50 லட்சமும், முதலீட்டு செலவுகளுக்காக ரூ.800 கோடியும் செலவு செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
The post ஏழுமலையானை விரைவாக தரிசிக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: செயல் அதிகாரி பேட்டி appeared first on Dinakaran.