திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் மத்திய உளவுத்துறை (ஐபி) பெண் அதிகாரி மேகா ரயில் மோதி பலியான சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது. கடைசியாக அவருடன் செல்போனில் பேசியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா அதிருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன். அவரது ஒரே மகள் மேகா (25). தடயவியல் அறிவியல் படித்து முடித்துள்ளார். கடந்த வருடம் தான் மத்திய உளவுத்துறையான ஐபியில் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து திருவனந்தபுரம் விமானநிலையத்தில் குடியுரிமை வழங்கல் பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மேகா இரவுப் பணியில் இருந்தார். பணியை முடித்துவிட்டு நேற்று காலை 9 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
9.15 மணியளவில் விமானநிலையம் அருகே உள்ள பேட்டை பகுதியில் ஒரு இளம்பெண் ரயில் மோதி இறந்த நிலையில் கிடப்பதாக அந்த பகுதியினர் பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உடலுக்கு அருகே மத்திய சிவில் விமான போக்குவரத்து துறையின் அடையாள அட்டை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் தான் இறந்தது விமானநிலைய உளவுத்துறை பெண் அதிகாரி மேகா என்பது தெரியவந்தது. விசாரணையில் அந்த வழியாக வந்த ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் தான் அவர் மீது மோதியது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரயில் என்ஜின் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தண்டவாளம் அருகே மேகா செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், ரயில் வரும் சத்தத்தைக் கேட்டதும் திடீரென தண்டவாளத்தின் குறுக்கே அவர் படுத்துவிட்டதாகவும் என்ஜின் டிரைவர் கூறினார். இதையடுத்து கடைசியாக மேகாவுடன் செல்போனில் பேசியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்தனர். ஆனால் ரயில் மோதியதில் செல்போன் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. சைபர் செல் உதவியுடன் அந்த போனில் உள்ள விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேகாவின் தந்தை மதுசூதனன் அரசு ஐடிஐயில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தாய் நிஷா பாலக்காடு கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
The post ஐபி பெண் அதிகாரி ரயில் மோதி இறந்ததில் மர்மம் நீடிப்பு; கடைசியாக போனில் பேசியது யார்?.. திருவனந்தபுரம் போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.