பெங்களூரு: பெங்களூருவில் தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை செய்து வரும் 97 நிறுவனங்ளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஐஸ்கிரீமில் துணி துவைக்கும் சலவை பொருள் கலக்கப்படுகிறது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 200க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பான உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 97 நிறுவனங்களில் தரமற்ற மற்றும் சுகாதார மற்ற நிலையில், ஐஸ்கிரீம் மற்றும் குளிர் பானங்கள் தயார் செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், சில உற்பத்தி நிறுவனங்கள் ஐஸ்கிரீமில் கிரீம்களை உருவாக்க சலவை தூளையும், குளிர் பானங்களில் உரையை அதிகரிக்க பாஸ்போரிக் அமிலத்தையும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், செலவை குறைப்பதற்காக சலவை தூள், யூரியா அல்லது ஸ்டார்ஸ் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட செயற்கை பாலை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. சர்க்கரைக்கு பதிலாக சுவை மற்றும் நிறத்தை மேம்படுத்த சாக்ரின் மற்றும் சாயக் கலவைகளையும் சேர்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல உற்பத்தியாளர்கள் குடிக்க தகுதியற்ற தண்ணீரை ஐஸ்கிரீம் மற்றும் குளிர் பானங்களில் சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது. சலவை தூள் கலந்த ஐஸ்கிரீம்களை உட்கொள்ளும் போது தொண்டை, உணவு குழாய், வயிற்றில் காயங்கள் ஏற்படும் என்றும் இருமல், சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மேலும், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல பாஸ்போரிக் அமிலம் கலக்கப்படும் குளிர் பானங்களால் எலும்புகள் வலுவிழக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
The post ஐஸ்கிரீமில் சலவைத் தூள், குளிர்பானத்தில் பாஸ்போரிக் அமிலம் கலக்கப்படுவதாக புகார்: பெங்களூருவில் 97 நிறுவனங்ளுக்கு நோட்டீஸ்!! appeared first on Dinakaran.