புதுடெல்லி: உத்தரகாண்டில் உள்ள புனித தலங்களான கேதார்நாத், ஹேம்குண்ட் சாகிபுக்கு யாத்திரை செல்ல மலையில் ரோப்கார் அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம் கேதார்நாத் செல்ல 9 மணி நேரமாகும் பயணம் வெறும் 36 நிமிடமாக குறையும். பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், தேசிய ரோப்கார் வழித்தட மேம்பாட்டுத் திட்டமான பர்வத்மாலா பரியோஜனாவின் கீழ் உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் மற்றும் சீக்கியர்களின் ஹேம்குண்ட் சாகிப் ஆகிய இரு புனித தலங்களுக்கு செல்ல ரோப்கார் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
உத்தரகாண்டின் கோவிந்த்காட்டிலிருந்து ஹேம்குண்ட் சாகிப் வரை 12.4 கிமீ தூரத்திற்கு ரோப் கார் அமைக்க ரூ.2,730.13 கோடியும், சோன்பிரயாக் முதல் கேதார்நாத் வரை 12.9 கிமீ தூரத்திற்கு கேபிள் கார் அமைக்க ரூ.4,081.28 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும். கடினமான மலைப்பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத் செல்ல தற்போது 9 மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலையில் ரோப்கார் மூலம் வெறும் 36 நிமிடத்தில் சென்றடையலாம். மேலும் ரோப்கார் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 1800 பயணிகள் வீதம் ஒருநாளைக்கு 18,000 பயணிகள் பயணிக்க முடியும். இதனால் கடந்த ஆண்டு கேதார்நாத் கோயிலுக்கு 23 லட்சம் யாத்ரீகர்கள் வருகை தந்த நிலையில் ரோப்கார் மூலம் பக்தர்கள் எண்ணிக்கை 36 லட்சமாக அதிகரிக்கும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதே போல, உத்தரகாண்ட் சமோலி மாவட்டத்தில் உள்ள ஹேம்குண்ட் சாகிப் புனித தலம் 15,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தற்போது இந்த மலைப்பகுதியில் கால்நடையாகவோ, குதிரைகள் அல்லது பல்லக்கு மூலமாகவோ பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு ரோப் கார் அமைக்கப்படுவதன் மூலம் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளின் பயணம் எளிதாகும். இவ்விரு திட்டங்களும் 4 முதல் 6 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். மேலும், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்படி ரூ.3,880 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு அதிக தரமான, மலிவான பொது கால்நடை மருந்துகள் வழங்கப்பட உள்ளன.
The post ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்; ஹேம்குண்ட், கேதார்நாத்துக்கு இனி ரோப்காரில் செல்லலாம்: 9 மணி நேர பயணம் 36 நிமிடமாக குறையும் appeared first on Dinakaran.