பெங்களூரு: ஒன்றிய அரசு மகதாயி மற்றும் மேகதாது திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தால் அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் நாளையே தொடங்கத் தங்கள் அரசு தயாராக இருப்பதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். பெலகாவி பிரிவு வேளாண்மைத் துறையின் மானியத்தின் கீழ் விவசாயிகளுக்கு சுமார் ரூ.400 கோடி மதிப்புள்ள விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று பெலகாவியில் உள்ள சுவர்ண விதான சவுதா வளாகத்தில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு உபகரணங்களை வழங்கிப் பேசிய முதல்வர் சித்தராமையா, மகதாயி திட்டத்திற்கு ஒன்றிய வனத்துறையிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. ஒன்றிய அரசு அனுமதியளித்தால் நாளையே பணிகளைத் தொடங்குவோம். அதேபோல், மேகதாது, கிருஷ்ணா மேலணைத் திட்டம் உட்பட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த மாநில அரசு தயாராக உள்ளது.
ஒன்றிய அரசு கூட்டாட்சி முறையில் தலையிட்டு நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய மற்றும் சிறு நீர்ப்பாசனத்திற்காக ரூ.25,000 கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. இருப்பினும், பத்ரா மேலணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு இதுவரை ஒரு பைசா கூட வழங்கவில்லை. மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
The post ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தால் மேகதாது திட்ட பணிகளை நாளையே தொடங்க தயார்: முதல்வர் சித்தராமையா பேச்சு appeared first on Dinakaran.