சென்னை: கூட்டுறவுத் துறை சார்பில் 10 ஆயிரம் புதிய வேளாண் கூட்டுறவு சங்கங்களை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நாட்டுக்கு அர்ப்பணித்து தொடக்கி வைத்தார். டெல்லி பூசாவில் உள்ள ஐசிஏஆர் மாநாட்டு மையத்தில் 10,000க்கும் மேற்பட்ட பன்னோக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பால், மீன்வள கூட்டுறவு சங்கங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங், ஒன்றிய கூட்டுறவு இணை அமைச்சர்கள் கிரிஷன் பால், முரளிதர் மொஹால், கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பண்டிட் மதன் மோகன் மாளவியா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகிய தலைவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: 10,000 புதிய பன்னோக்கு தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் குறித்து அறிவிக்கப்பட்ட 86 நாட்களுக்குள் அவை வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவியவுடன், கூட்டுறவினர் மூலம் வளம் என்ற குறிக்கோளை அறிமுகப்படுத்தினார்.
இந்த தொலைநோக்குப் பார்வையை அடைய ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கூட்டுறவுகள் தேவை, தொடக்க கூட்டுறவு சங்கங்கள் இந்தியாவின் 3 அடுக்கு கூட்டுறவு கட்டமைப்பின் அடித்தளம் ஆகும். அதனால்தான் ஒன்றிய அரசு 2 லட்சம் புதிய தொடக்க வேளாண் கடன் சங்கங்களை நிறுவ ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. கூட்டுறவு அமைப்புகளின் கணினிமயமாக்கல் பல்துறை முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் 10 கூட்டுறவு சங்கங்களுக்கு ரூபே கிசான் கடன் அட்டைகள், மைக்ரோ ஏடிஎம்களை விநியோகித்தார்.
தற்போது நடைபெற்று வரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு தொடக்க பால் பண்ணையிலும் மைக்ரோ ஏடிஎம் விரைவில் பொருத்தப்படும். புதிய மாதிரி துணை விதிகளை ஏற்றுக்கொள்வது பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், பழங்குடியினரின் தீவிர பங்கேற்பை உறுதி செய்வதையும், சமூக – பொருளாதார சமத்துவத்தை வளர்ப்பதையும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதையும் உறுதி செய்கிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 2 லட்சம் புதிய பிஏசிஎஸ் நிறுவ மோடி அரசு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அடையப்படும் என்று நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
The post ஒன்றிய கூட்டுறவுத்துறை சார்பில் 10 ஆயிரம் புதிய வேளாண் கூட்டுறவு சங்கங்கள் தொடக்கம்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடக்கி வைத்தார்; 5 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய தொடக்க வேளாண் கடன் சங்கங்களை உருவாக்க இலக்கு appeared first on Dinakaran.