புதுடெல்லி: ‘ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல’ என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. திட்டக்கமிஷனுக்கு மாற்றாக கடந்த 2015ம் ஆண்டு நிதி ஆயோக் அமைப்பை ஒன்றிய பாஜ அரசு உருவாக்கியது. தேச வளர்ச்சியில் மாநிலங்களின் பங்கு, ஈடுபாடு, கூட்டாட்சியை வளர்த்தல், அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு ஆண்டுதோறும் கூடுகிறது.
இதன்படி, 10வது நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் பாரத மண்டபத்தில் நேற்று நடந்தது. 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதே இக்கூட்டத்தின் கருப்பொருள். கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றனர். இதில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தின் வளர்ச்சி குறித்த பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர்.
பின்னர் பிரதமர் மோடி கூட்டத்தில் பேசியதாவது: வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது ஒவ்வொரு இந்தியரின் இலக்கு. ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடைந்ததாக மாறும் போது, இந்தியாவும் 140 கோடி மக்களின் விருப்பத்தை எட்ட முடியும். எனவே ஒவ்வொரு மாநிலத்தையும், ஒவ்வொரு நகரத்தையும், ஒவ்வொரு தாலுகாவையும், ஒவ்வொரு கிராமத்தையும் வளர்ச்சி அடையச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த வழியில் நாம் செயல்பட்டால் விக்சித் பாரத்திற்காக 2047ம் ஆண்டு வரையிலும் காத்திருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு மாநிலமும் குறைந்தபட்சம் ஒரு சுற்றுலா தலத்தையாவது உலகத் தரத்திற்கு உருவாக்க வேண்டும். அங்கு அனைத்து வசதிகளும் உள்கட்டமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.
வளர்ச்சி, புதுமை, நிலைத்தன்மை ஆகியவை இந்திய நகரங்களின் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக இருக்க வேண்டும். எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் நகரங்களை நோக்கி நாம் பாடுபட வேண்டும் நமது வளர்ச்சியின் வேகத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். இதில், ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் டீம் இந்தியா போல இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. இவ்வாறு அவர் பேசினார். 2047ம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் முயற்சியை விரைவுபடுத்த 3 மாநில அரசுகள் கொண்ட துணை குழுக்களை உருவாக்க வேண்டுமென ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார். இந்த தேசிய லட்சியத்திற்காக தனது மாநிலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க உறுதிபூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
* நதிநீர் பங்கீட்டில் பஞ்சாப்பிற்கு அநீதி
சட்லஜ் நதிநீர் பங்கீடு தொடர்பாக பஞ்சாப்-அரியானா மாநிலங்கள் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், ‘‘ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆறுகள் மூலம் ஏற்கனவே போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. பஞ்சாப், அரியானா இடையே நதி நீரைப் பிரித்தபோது, யமுனை நீர் கருத்தில் கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் ரவி, பியாஸ் நீர் முறையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 1966 மறுசீரமைப்பிற்குப் பிறகு பஞ்சாப், யமுனை நதிப் படுகைக்குள் வருகிறது. எனவே யமுனை நீரிலும் பஞ்சாப்புக்கு சம உரிமை தர வேண்டும். எங்களின் இந்த கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. பஞ்சாப்பிற்கு அநீதி இழைக்கப்படுகிறது’’ என்றார்.
* புறக்கணித்த 5 முதல்வர்கள்
கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரளா முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார்.
The post ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல: நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு; ஆபரேஷன் சிந்தூருக்கு ஒருமனதாக ஆதரவு appeared first on Dinakaran.