புதுடெல்லி: ஒரு நாளைக்கு 12 நேரம் பிரசங்கம் செய்யும் மோடி தான் நாட்டின் விளம்பர அமைச்சர் என்று நடிகர் சத்ருகன் சின்ஹா கிண்டலாக கூறினார். பாலிவுட் நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்பியுமான சத்ருகன் சின்ஹா, டெல்லி முதல்வரான ஆம்ஆத்மி வேட்பாளர் அடிசிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘மாண்புமிகு விளம்பர அமைச்சர் யார்? என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் தான் நமது நாட்டின் பிரதமர். அவர் எனது நண்பர்; நமக்கெல்லாம் பிரதமர்.
அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்கிறார் என்று கூறப்படுகிறது; ஆனால் 10 முதல் 12 மணி நேரம் பிரசங்கம் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்கள் என்று எந்த தேர்தல்களாக இருந்தாலும், நீங்கள் அவரை அங்கு பார்த்தாலும்; அவர் எப்போதும் தேர்தல் களத்திற்கு செல்வார். இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, ஒவ்வொரு நபரின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போன்ற மோடியின் முந்தைய தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த காலங்களில் ஒரு நாளைக்கு 32 ரூபாயாக இருந்த விவசாயிகளின் வருமானம், தற்போது 27 ரூபாயாக குறைந்துள்ளது.
அவர்கள் என்ன சாப்பிடுவார்கள்? அவர்கள் எப்படி தங்கள் குடும்பங்களை காப்பாற்றுகிறார்கள்? என்பது தெரியவில்லை. கடந்த 2021 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கேலி செய்தார். ஆனால் மக்கள் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். மம்தா பானர்ஜியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தனர். நான் எனது மனதில் இருப்பதை அப்படியே பேசுகிறேன். டெலிப்ராம்ப்டரை பார்த்து படிக்கவில்லை. மோடியின் ‘மன் கி பாத்’ நடத்தவில்லை. ‘தில் கி பாத்’ நடத்துகிறேன். டெல்லி முதல்வரான அடிசிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். கெஜ்ரிவாலின் மக்கள் பணிக்கு தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது’ என்றார்.
The post ஒரு நாளைக்கு 12 நேரம் பிரசங்கம் செய்யும் நாட்டின் ‘விளம்பர’ அமைச்சர் மோடி: நடிகர் சத்ருகன் சின்ஹா கிண்டல் appeared first on Dinakaran.