ஜூனகத்: குஜராத்தில் பாழடைந்த பாலம் ஒன்றை இடிக்கும்போது அங்கிருந்த மக்கள் ஆற்றில் விழுந்தனர். குஜராத் மாநிலத்தில் வதோதரா ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் விதமாக கட்டப்பட்டிருந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா பாலம் கடந்த 9ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்து ஒருவாரத்துக்குள் மற்றொரு பால விபத்து நடந்துள்ளது.
ஜூனகத் மாவட்டம் மங்க்ரோல் நகரத்துக்கு அருகே அன்ட்ரோல் மற்றும் கேஷோட் கிராமங்களை இணைக்கும் விதமாக பாலம் ஒன்று இருந்தது. மிகவும் பழமையான இந்த பாலத்தை இடிக்கும் பணிகள் நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் ஆற்றுக்குள் விழுந்தனர். ஆனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜூனகத் மாவட்ட ஆட்சியர் அனில் ரணவாசியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பழமையான கம்பீரா பாலம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து ஜூனகத் மாவட்டத்தில் உள்ள பழமையான பாலங்களை கணக்கெடுத்து, இடிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 480 பாலங்களில் 6 பாலங்கள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டு, அந்த பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மங்க்ரோல் நகரில் அன்ட்ரோல் மற்றும் கேஷோட் இணைக்கும் விதமாக இருந்த பாழடைந்த பாலத்தை இடிக்கும் பணிகள் திங்கள்கிழமை(ஜூலை 14) நடந்து கொண்டிருந்தது. அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிந்தது. இருந்தபோதும் எதிர்பாரா விதமாக பாலம் இடிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க சில மக்கள் அங்கே கூடினர். அப்போது இடிக்கப்பட்ட பாலத்தின் ஒருபகுதி ஆற்றில் விழுந்தபோது அங்கிருந்த மக்களும் விழுந்தனர். ஆழம் குறைவான ஆற்றில் விழுந்த மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” என இவ்வாறு தெரிவித்தார்.
The post ஒரு வாரத்தில் மற்றொரு விபத்து; குஜராத்தில் பாழடைந்த பாலத்தை இடிக்கும்போது ஆற்றில் விழுந்த மக்கள்: யாருக்கும் பாதிப்பில்லை appeared first on Dinakaran.