டாவோஸ்: கடந்தஆண்டில் உலக அளவில் கோடீஸ்வரர்களின் செல்வம் மூன்று மடங்கு வேகமாக வளர்ந்தது என்றும் உலக கோடீஸ்வரர்களின் சொத்துக்கள் ரூ.170 லட்சம் கோடி அதிகரித்து ரூ.1275 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று ஆக்ஸ்பாம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தின் முதல் நாளில், உலகளாவிய சமத்துவமின்மைக்கான பின்னணி குறித்த அறிக்கையை சர்வதேச உரிமை குழுவான ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. டேக்கர்ஸ் நாட் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக பணக்காரர்களின் கூட்டுச் சொத்து கடந்த ஆண்டு ரூ.170 லட்சம் கோடி அதிகரித்து ரூ.1275 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் உலகில் 2,769 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 204 அதிகம்.வருடத்தில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது நான்கு புதிய கோடீஸ்வரர்கள் உருவாகிறார்கள். ஆசியாவில் மட்டும் 41 புதிய கோடீஸ்வரர்கள் உள்ளனர். உலகின் பத்து பெரிய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.800 கோடி அதிகரிக்கிறது. ஒரே இரவில் 99 % செல்வத்தை இழந்தாலும், அவர்கள் கோடீஸ்வரர்களாகவே இருப்பார்கள். வரலாற்று காலனித்துவ காலத்தில் முக்கியமானதாக இருந்த சமத்துவமின்மை மற்றும் கொள்ளை, நவீன வாழ்க்கையை தொடர்ந்து வடிவமைத்து வருகிறது. இது ஒரு ஆழமான சமத்துவமற்ற உலகத்தை உருவாக்கியுள்ளது.சமத்துவமின்மை, நீக்குவதற்கு கோடீஸ்வரர்கள் மீது அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஆக்ஸ்பாம் நிர்வாக இயக்குனர் அமிதாப் பெஹர் கூறுகையில்,‘‘ உலகப் பொருளாதாரத்தை சில சலுகைகள் பெற்றவர்கள் கைப்பற்றுவது கற்பனைக்கு எட்டாத உயரத்தை எட்டியுள்ளது. கோடீஸ்வரர்களின் சொத்துக் குவிப்பு விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.அதே போல் பட்டினியும் அதிகரித்துள்ளது.பன்னாட்டு நிறுவனங்கள் அதிகளவு சொத்துகளையும் வளங்களையும் வைத்துள்ளது நவீன கால காலனித்துவத்தை உணர்த்துகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இன்று(நேற்று)பதவியேற்கிறார். அவர் பதவியேற்கும் போது உலகின் மிக பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கை ஆலோசகராக நியமித்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் இல்லாத வகையில் 13 கோடீஸ்வரர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.இதனால் கோடீஸ்வரர்களுக்கு மேலும் சலுகைகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
The post கடந்த ஆண்டில் உலக கோடீஸ்வரர்களின் சொத்து ரூ.1275 லட்சம் கோடியாக உயர்வு appeared first on Dinakaran.