பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மனைவி என்பதைத் தவிர வேறு எந்த முக்கியத்துவமும் இல்லாதவர் ராப்ரி தேவி என விமர்சித்த நிதிஷ் குமார், கட்சி உங்களுடையது அல்ல உங்கள் கணவருடையது என கூறி அவரை கண்டித்தார்.
பிஹார் சட்ட மேலவையில் இன்று (மார்ச் 25) ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. ஆர்ஜேடி எம்எல்சி-க்கள் தங்கள் கட்சிக் கொடியின் நிறமான பச்சை நிறத்தில் பேட்ஜ்களை அணிந்து அவைக்கு வந்தனர். பிஹாரில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடுகளை 'தேஜஸ்வி அரசாங்கம்' உயர்த்தியது என்றும், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அது 'திருடப்பட்டது' என்றும் தெரிவிக்கும் வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.