புதுடெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில் கடந்த 14 ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போது,பொருட்கள் வைக்கும் அறையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாயவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார். மேலும் நீதிபதி வர்மாவுக்கு நீதிமன்ற பணிகள் எதுவும் ஒதுக்கக்கூடாது என்று கூறியிருந்தார். இதுகுறித்து டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை நடத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்தார். கடந்த 22ம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிக்கை உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து 2ம் கட்டமாக 3 நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்தார். இந்த குழு நீதிபதி வர்மாவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியது. 2 நாட்கள் கழித்து, உச்சநீதிமன்ற கொலிஜிய கூட்டத்தில் நீதிபதி வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு இடம் மாற்றுவதற்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது,இந்த சம்பவம் குறித்து உள்விசாரணை நடைபெற்று வருகிறது.விசாரணை முடிந்ததும் வழக்கு பதிவு செய்வதற்கு தலைமை நீதிபதி உத்தரவிடலாம். எனவே இப்போது வழக்கு பதிய தேவை இல்லை என்று கூறி மனுவை நேற்று தள்ளுபடி செய்தனர். இந்த சர்ச்சைகளுக்கு இடையே, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான உத்தரவுக்கு சட்ட அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள சந்திரதாரி சிங் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கும் ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள அரிந்தம் சின்காவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி தனித்தனி உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது.
* நீதிமன்ற பணிகள் வழங்கக்கூடாது
நீதிபதி வர்மாவை அலகாபாத்துக்கு இடமாற்றம் செய்ததை உறுதி செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், நீதிபதி வர்மாவுக்கு தற்காலிகமாக நீதிமன்ற பணிகள் எதுவும் வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம்: ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு appeared first on Dinakaran.