திருமலை: கணவருக்கு தன்னை விட 20 வயது அதிகம் என்பதால் விரக்தி அடைந்த பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ 3 குழந்தைகளை தலையணையால் அமுக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் சென்னய்யா(55), தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். இவரது மனைவி ரஜிதா(35). மகன்கள் சாய்கிருஷ்ணா(12), கவுதம்(8), மகள் மதுப்ரியா(10). கடந்த மாதம் 27ம் தேதி இரவு, தனது பிள்ளைகள் தயிர் சாதம் சாப்பிட்டதால், இறந்துவிட்டதாகவும் தனக்கும் வயிற்றுவலி ஏற்பட்டதாக ரஜிதா அக்கம் பக்கத்தினரிடம் கூறி அழுதுள்ளார். இதையறிந்த சென்னய்யா இரவு பணியில் இருந்து வீட்டிற்கு வந்து மனைவி ரஜிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னய்யாவிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரஜிதாவிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரது மொபைல் போனை ஆய்வு செய்தனர். அதில் சம்பவத்தன்று ரஜிதா யாருடனோ அதிக நேரம் பேசியது தெரியவந்தது. மேலும் 3 குழந்தைகளை கொன்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து ரஜிதாவிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: ரஜிதாவுக்கும், சென்னய்யாவுக்கும் 20 வயது வித்தியாசம். உறவினர்கள் கட்டாயத்தால் திருமணம் நடந்துள்ளது. கணவருக்கு அதிக வயது என்பதால் அவர்களது திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜிதா படித்த பள்ளியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம் நடந்தது.
அதில் பங்கேற்ற ரஜிதாவுக்கும், அவருடன் பத்தாம் வகுப்பில் படித்த சக நண்பரான சிவக்குமார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ரஜிதா கேட்டுள்ளார். அதற்கு சிவகுமார், தனது தங்கைகளுக்கு திருமணம் செய்தபிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களில் சந்தித்துள்ளனர். இதற்கிடையில் கள்ளக்காதல் விவரம் ரஜிதா குடும்பத்தினருக்கு தெரிந்ததால் அவர்கள் கண்டித்துள்ளனர்.
இதனால் குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக்காதலனை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி சம்பவ தினத்தன்று குழந்தைகள் தூங்கிய பின் அவர்களது முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொன்றுள்ளார். கொலையை மறைக்க தயிர் சாதம் சாப்பிட்டதால் இறந்ததாக நாடகம் ஆடி நம்ப வைத்துள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், ரஜிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post கணவருக்கு 20 வயது அதிகம் என்பதால் விரக்தி; கள்ளக் காதலனை திருமணம் செய்ய 3 குழந்தைகளை கொன்ற இளம்பெண்: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.