புதுடெல்லி: ரெடிட் சமூக ஊடகத்தில் ஒருவர் சுவாரஸ்யமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவருக்கு உடலில் அரிப்பு, வீக்கம், உணர்வின்மை, தலைவலி என விவரிக்க முடியாத பல அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. அவர் அனைத்து வகையான பரிசோதனைகளையும் எடுத்தார். ஆனால் அவரது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கு மருத்துவ நிபுணர்களால் சரியான காரணத்தை கடந்த 10 ஆண்டுகளாக கண்டறிய முடியவில்லை.
இதனால் அவர் சாட் ஜிபிடி தளத்தில் தனது உடலில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தேடியுள்ளார். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சாட் ஜிபிடி அளித்த தகவலில், அவருக்கு homozygous A1298C MTHFR mutation பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மரபணு மாற்றத்தால் ஏற்படும் இந்த பாதிப்பு 7 முதல் 12 சதவீதம் பேருக்கு ஏற்படும் அரிய வகை நோய். இத்தகவலை அவர் மருத்துவரிடம் கொண்டு சென்றபின் எம்டிஎச்எப்ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என தங்களுக்கு தோன்றவில்லை என தெரிவித்துள்ளனர். இப்பரிசோதனைக்குப்பின் அவர் மேற்கொண்ட சிகிச்சையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.