பெங்களூரு: பெலகாவியில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து நடத்துநருக்கு மராத்தி பேசத் தெரியாத காரணத்திற்காக, அவரை மராத்தியர்கள் சிலர் தாக்கிய சம்பவம் கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. எல்லை மாவட்டங்களில் மராத்தியர்களின் அத்துமீறல் மற்றும் அரசுப் பேருந்து நடத்துநர் மீதான மராத்தியர்களின் தாக்குதலைக் கண்டித்து நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்தன. பெங்களூருவில் திறந்திருந்த கடைகளை அடைத்து முழு அடைப்புக்கு ஒத்துழைப்பு தருமாறு கன்னட அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் பரவலாக மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் வழக்கம்போல இயங்கின. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பம்ப்புகள், மெட்ரோ ரயில் சேவை ஆகிய அனைத்து முக்கியமான சேவைகளும் எந்த தடையும் இடையூறும் இல்லாமல் வழக்கம்போல செயல்பட்டன. பிஎம்டிசி பேருந்துகளும் இயங்கின. வாட்டாள் நாகராஜ், சாரா கோவிந்த் உள்ளிட்ட கன்னட அமைப்பினர் பெங்களூருவில் உள்ள மைசூரு வங்கி சர்க்கிள் பகுதியில் கன்னட கொடியை ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர். அவர்களைப் போலீசார் கைது செய்தனர். எதற்காக, யார் பந்த் நடத்துகிறார்கள் என்று பொதுமக்களில் பலருக்கும் தெரியவில்லை.
The post கன்னட நடத்துநரை மராத்தியர்கள் தாக்கியதை கண்டித்து கர்நாடகாவில் பந்த் போராட்டம் பிசுபிசுத்தது appeared first on Dinakaran.