டெல்லி: கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நியமானதாக இருக்க வேண்டுமே தவிர கற்பனையானதாக இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் இம்ரான் பிரதாப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட கவிதை தொடர்பாக அவர் மீது குஜராத் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு எதிராக அவர் தொடர்ந்த வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இம்ரான் பிரதாப் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இம்ரான் பிரதாப்கர் மீது குஜராத் போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்த நீதிபதிகள், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கூறினர். ஒருவருடைய கருத்துகள் நீதிபதிகளுக்கே பிடிக்கவில்லை என்றாலும், உடன்பாடு இல்லை என்றாலும் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். பேச்சுகள் மீதான கட்டுப்பாடு நியாயமானதாக இருக்க வேண்டுமே தவிர, கற்பனையானதாக இருக்கக்கூடாது என்று நீதிபதிகள் கூறினர்.
கருத்து தெரிவிக்கும் உரிமை மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நீதிபதிகள், எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் இல்லாமல் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 21ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள கௌரவமான வாழ்க்கைக்கான உறுதி மொழியை தொடர முடியாது என்று கூறினர். ஆரோக்கியமான ஜனநாயகத்தில் எதிர்க் கருத்துகளை பதில் கருத்துகள் மூலம் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர; ஒடுக்குமுறை மூலம் அல்ல என்று குஜராத் போலீசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், கவிதைகள், நாடகங்கள், படங்கள், இலக்கியங்கள், வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினர்.
The post கருத்து சுதந்திரத்தை நீதிபதிகள் மதிக்க வேண்டும்: குஜராத் காங். எம்.பி. வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.