திருமலை: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஞானக்கிராம்கூடா பகுதியில் உள்ள ஒரு கோயிலின் பின்புறம் கல்குவாரி உள்ளது. நேற்று அப்பகுதி இளைஞர்கள் காற்றாடி விடச்சென்றபோது அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால் அவர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது முகம் சிதைத்து பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலமும் சற்று தொலைவில் நிர்வாண நிலையில் முகம் சிதைத்து எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலமும் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் நார்சிங் போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐதராபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்கள் அருகே மதுபாட்டில்கள் கிடந்தது. இதுபற்றி நடத்திய விசாரணையில், கொலையான வாலிபர் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த அங்கீத்சாகேத் (35). இவர் ஞானக்கிராம் கூடாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மைப்பணி செய்துள்ளார்.
அவருடன் சடலமாக கிடந்த இளம்பெண், சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பிந்து (25) என்பதும் அங்குள்ள எல்.பி. நகரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார் என்பதும் தெரிந்தது. இருவரும் காதல் ஜோடியாக இருக்கலாம் என தெரிகிறது. அவர்களது செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இருவரும் கடந்த 11ம் தேதி சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களுடன் வேறு யாரேனும் வந்தார்களா? என்று தெரியவில்லை.
அங்கீத்சாகேத், பிந்துவுடன் தனிமையில் இருந்தபோது குடிபோதையில் வந்த கும்பல் வாலிபரை தாக்கி அந்த பெண்ணை இழுத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்றும், இதனை அங்கீத்சாகேத் தடுக்க முயன்றதால் அவரை கடுமையாக தாக்கி முகம் சிதைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றிருக்கலாம் என்றும் இதேபோல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணையும் முகம் சிதைத்து உயிருடன் எரித்துக்கொன்றிருக்கலாம் என்று தெரிகிறது.
The post கல்குவாரியில் தனிமையில் இருந்த காதல் ஜோடி எரித்துக்கொலை: தெலங்கானாவில் பயங்கரம் appeared first on Dinakaran.